ஜோகூர் பாரு, மார்ச் 2 – இங்குள்ள ஜாலான் ஜோகூர் பாரு – ஆயர் ஹீத்தாம் சாலையின் 9 வது கிலோமீட்டரில் போக்குவரத்துக்கு எதிர் திசையில் வாகனத்தைச் செலுத்தியதாக கூறப்படும் மூதாட்டி ஒருவரை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர்.
நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2.50 மணிக்கு இடையே போக்கு வரத்துக்கு எதிராக சாம்பல் நிற ஹோண்டா சிவிக் கார் பயணிப்பதைக் காட்டும் 13 வினாடி காணொளி எக்ஸ் தளத்தில் (முன்பு ட்விட்டர் என அழைக்கப்பட்டது) பகிரப்பட்டது தங்கள் கவனத்திற்கு வந்ததாக ஜொகூர் பாரு உத்தாரா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் கூறினார்.
தகவல்களின் அடிப்படையில், விசாரணையில் உதவுவதற்காக 75 வயதுடைய சந்தேக நபர் மூதாட்டியை நேற்று மாலை 4.11 மணியளவில் நாங்கள் தடுத்து வைத்தோம் என்று அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
போலீசார் உத்தரவின் பேரில் இஸ்கந்தர் புத்ரி காவல் நிலையத்திற்கு வந்த போது அந்த மூதாட்டி கைது செய்யப்பட்டதாக பல்வீர் கூறினார்.
முதற்கட்ட விசாரணையில் அம்மூதாட்டி குடிபோதையில் இல்லை எனத் தெரியவந்தது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில் அவருக்கு டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி நோய் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது என்றார் அவர்.
குற்றவாளி என நிரூபிக்க பட்டால் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை, 15,000 வரை அபராதம் விதிக்க வகை செய்யும் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 42(1)வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.