கோலாலம்பூர், மார்ச் 10- பெட்டாலிங் ஜெயாவின் சுங்கைவே, புக்கிட் தண்டாங் கல்லறைக்கு அருகில் உள்ள கிள்ளான் ஆற்றில் தண்ணீர்க் குழாயில் சிக்கிய நிலையில் ஆடவர் ஒருவரின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
அவ்வாடவரின் உடல் கண்டுபிடிக்கப்படது தொடர்பில் நேற்று காலை 9.00 மணிக்கு தங்கள் தரப்புக்கு புகார் கிடைத்ததாக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் கூறினார்.
முழுமையாக ஆடை அணிந்த நிலையில் தலைகுப்புறக் கிடந்த அந்த உடலில் அடையாள ஆவணங்கள் எதுவும் காணப்படவில்லை என்று அவர் சொன்னார்.
அந்த ஆடவரின் நெற்றியில் காயங்களும் இரு கைகளிலும் சிராய்ப்புகளும் மற்றும் இடது விலாப் பகுதியில் வீக்கமும் இருப்பது தொடக்கக் கட்டச் சோதனையில் கண்டறியப்பட்டது என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தில் ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் இதுவரை குற்றத் தன்மைக்கான கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் வான் அஸ்லான் கூறினார்.
இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இறப்புக்கான காரணத்தை கண்டறிய இன்று செர்டாங் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.