MEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

புதிய பள்ளித் தவணை ஜனவரியில் தொடங்கினாலும் பாடத்திட்டத்தில் பாதிப்பு ஏற்படாது

ஜோகூர் பாரு, மே 10- வரும் 2026ஆம் ஆண்டில் புதிய பள்ளித் தவணையை ஜனவரி மாதத்திற்கு மறுபடியும் மாற்றும் திட்டத்தால் இவ்வாண்டு பள்ளி பாடத்திட்டங்களில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஆகவே, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பள்ளித் தவணை மறுசீரமைப்பு குறித்து பெற்றோர்கள் கவலையடையத் தேவையில்லை என்று கல்வித் துறை தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் கூறினார்.

ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான பள்ளித் தவணையை மறுபடியும் அமல்படுத்துவதற்கு ஏதுவாக மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பாடத் திட்டத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இந்த திட்டத்தை நாங்கள் வழக்கம் போல் அமல்படுத்துவோம். தவணை விடுமுறையில் மட்டும் சிறிது மாற்றம் இருக்கும். அதாவது பள்ளி விடுமுறை காலம் குறைக்கப்படும் என்று இங்குள்ள சுல்தான் இஸ்மாயில் தேசிய பள்ளிக்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

வரும் 2026ஆம் ஆண்டில் பள்ளித் தவணை ஜனவரி மாதத்திற்கு மாற்றம் செய்யப்படவுள்ளதால் இவ்வாண்டு பள்ளிகளில் பாடங்கள் மிகவும் அடர்த்தியான அட்டவணைகளைக் கொண்டிருக்குமா என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

பள்ளித் தவணை பழைய நிலைக்குத் திரும்பினால் பள்ளி நாட்கள் எண்ணிக்கை முன்புபோல் 190 நாட்களாக இருப்பது உறுதி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

பள்ளிகளில் கல்வித் தவணை வரும் 2026ஆம் ஆண்டு தொடங்கி ஜனவரி மாதத்தில் தொடங்கும் என்று கல்வியமைச்சர் ஃபாட்லினா சீடேக் முன்னதாக கூறியிருந்தார்.


Pengarang :