ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நோன்புப் பெருநாளை முன்னிட்டு எஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை விரிவுபடுத்தப்படும்

ஷா ஆலம், மார்ச் 16- அடுத்த மாதம் கொண்டாட படவிருக்கும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு   மாநில அரசு தனது ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனைத் திட்டத்தை விரிவுபடுத்த இருக்கிறது.

சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்(பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டில் மூன்று மண்டலங்களை உள்ளடக்கிய  சிறப்பு  பயண  நிகழ்வை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இது குறித்து விரைவில் பொதுமக்களுக்கு அறிவிப்போம். இந்தத் திட்டம் நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட இடங்களை  உள்ளடக்கியிருக்கும். அந்த இடங்களில் சிலாங்கூரின் வடக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதிகளும் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மாவட்டங்கள் முழுவதும் உள்ள பல்வேறு ஆற்றல்கள், பகுதி பொருத்தம், பொருட்கள் கிடைப்பது மற்றும் நேரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த திட்டம்  மூன்று மண்டலங்களில் மட்டுமே நடைபெறும் என அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள கிளேன்மேரியில் நடைபெற்ற சிலாங்கூர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையம் மற்றும்  ஐமோட்டோர்பைக்   ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும்  நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

கடந்தாண்டு  இந்த ஏஹ்சான் ரஹ்மா விற்பனை 3 கோடியே  8 லட்சம் வெள்ளி விற்பனையை பதிவு செய்தது. இந்த திட்டம் சிலாங்கூர் குடியிருப்பாளர்கள் 1 கோடியே 81 லட்சம்  வெள்ளியை  சேமிக்க வழிவகுத்தது. கடந்தாண்டு மாநிலம் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மலிவு விற்பனை நடைபெற்றது.


Pengarang :