MEDIA STATEMENTNATIONAL

ஊழல் புகார் தொடர்பாக  நிறுவன உரிமையாளர்கள் மூவர் கைது

புத்ராஜெயா, மார்ச் 16 – ஊழல் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில்  ‘டத்தோ’ விருது கொண்ட இருவர் உட்பட மூன்று நிறுவன உரிமையாளர்களை  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளது.

அந்த மூன்று பேரும் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் எம் ஏ.சி.சி. தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக வட்டாரம் ஒன்று கூறியது.

எம்.ஏ.சி.சி. விண்ணப்பித்த தடுப்புக் காவல் அனுமதியை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் கைருன்னிசா காஸா,  ஆடவர் ஒருவரை வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) வரை மூன்று நாட்களுக்கும் டத்தோ அந்தஸ்து  கொண்ட இருவரை ஒரு தினத்திற்கு தடுத்து வைப்பதற்கான அனுமதியை வழங்கினார்.

கடந்த 2018 முதல் 2023 வரை நாட்டின் நுழைவாயில்கள்  வழியாக மேற்கொள்ளப்பட்ட  புகையிலை, சிகரெட் மற்றும் மதுபானம் கடத்தலுக்கு  எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக  அரசு ஊழியர்களுக்கு அம்மூவரும் லஞ்சம் கொடுத்ததாக நம்பப்படுகிறது.

இதற்கிடையில்,  ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு சந்தேக நபர்களின் காவலை மேலும் ஒரு நாள் நீட்டிக்க எம்.ஏ.சி.சி. செய்த விண்ணப்பத்தை கைருன்னிசா ஏற்றுக் கொண்டார்.

இதே வழக்கு தொடர்பில்  30 மற்றும் 40 வயதுடைய இரு சந்தேக நபர்களும் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 11) மற்றும் செவ்வாய்கிழமை (மார்ச் 12) ஆகிய இரு தினங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் நுழைவாயில்கள்  வழியாக புகையிலை, சிகரெட் மற்றும் மதுபானங்களை  கடத்தி வரும் கும்பலிடம் இருந்து 50 லட்சம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் நான்கு அரசு ஊழியர்களை எம்.ஏ.சி.சி. கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தது.


Pengarang :