NATIONAL

புகைப்பதற்கு எதிரானத் தடை பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் பணியில் 189 அமலாக்க அதிகாரிகள்

கோலாலம்பூர், மார்ச் 19 – தடை விதிக்கப்பட்ட இடங்களில் பொது மக்கள்
புகை பிடிக்காமலிருப்பதை உறுதி செய்யும் பணியை மேற்கொள்ள
1983ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் (சட்டம் 281) 3வது பிரிவின் கீழ்
போலீஸ் பந்துவான், ஊராட்சி மன்ற பணியாளர்கள் உள்பட 189 பேருக்குச்
சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இது தவிர 2024ஆம் ஆண்டு பொது சுகாதாரத்திற்கான புகையிலைப்
பொருள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழும் அரசு சாரா அமைப்புகள்,
நிபுணத்துவ அமைப்புகள் மற்றும் இதர துறைகளின் பங்கேற்புடனும் இந்த
சோதனை நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்
துறை துணையமைச்சர் டத்தோ லுக்கானிஸ்மான் அவாங் சவுனி
கூறினார்.

தற்போது 189 அமலாக்க அதிகாரிகளுக்கு அதாவது 95 கோலாலம்பூர்
மாநகர் மன்ற அதிகாரிகள், சன்வே குழுமத்தைச் சேர்ந்த 77 போலீஸ்
பந்துவான் உறுப்பினர்கள், 17 சுங்கை பூலோ மாரா தொழில்நுட்ப
பல்கலைக்கழக போலீஸ் பந்துவான் உறுப்பினர்கள் ஆகியோருக்கு பொது
இடங்களில் புகைப்பிடிப்போரை கண்காணிக்கும் அதிகாரம்
வழங்கப்பட்டுள்ளது என்று அவர் மேலவையில் கேள்வி நேரத்தின் போது
குறிப்பிட்டார்.

பொது மக்களின் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில்
பொது இடங்களில் புகைபிடிக்கும் குற்றங்களைத் தடுப்பதற்கு
சம்பந்தப்பட்டத் தரப்பினருடன் அமைச்சு மேற்கொண்டு வரும் கூட்டு
நடவடிக்கைகள் குறித்து செனட்டர் டாக்டர் நோராய்னி எழுப்பிய
கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

உணவகங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதிக்கு அப்பால்
சிறப்பு புகைப்பிடிக்கும் பகுதியை உருவாக்குவதற்குச் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களின் அனுமதியை உணவகங்கள் பெற வேண்டும் என்றும் அவர்
சொன்னார்.

பிரத்தியேக புகைப்பிடிக்கும் பகுதிகளை உருவாக்க விரும்பும்
உணவகங்கள் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்
என்பதோடு ஊராட்சி மன்றங்களின் அனுமதியையும் பெற வேண்டும்
என்று 2020ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில்
வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு நிபந்தனை விதித்துள்ளது
என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :