NATIONAL

இரண்டு இடைநிலைப் பள்ளி மாணவர்களைத் தாக்கிய நான்கு பேர் கைது

கோலாலம்பூர், மார்ச் 19: சுங்கை லோங், காஜாங்கில் உள்ள பள்ளியின் முன் நடந்த சண்டையில் இரண்டு இடைநிலைப் பள்ளி மாணவர்களைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு பேரை அம்பாங்கைச் சுற்றி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

கடந்த வியாழன் பிற்பகல் 3.04 மணியளவில் காவல் துறையினருக்குக் கிடைத்த புகாரை அடுத்து 18 முதல் 21 வயதுடைய சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப் பட்டதாகக் காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் சைட் ஹாசன் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 16 மற்றும் 17 வயதுடைய மாணவர்கள், பிவிசி குழாய்கள் மற்றும் இரும்பு கம்பிகள் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி சுமார் 10 பேர் கொண்ட குழுவினரால் தாக்கப்பட்டனர். பின்னர் சந்தேக நபர்கள் இரண்டு வாகனங்களில் தப்பிச் சென்றுள்ளனர் என அறியப்பட்டது.

“பாதிக்கப்பட்ட இருவரும் காஜாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் மற்றும் தாக்கப்பட்டதன் விளைவாகத் தலை மற்றும் உடலில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சந்தேக நபர்கள் தற்போது விசாரணைக்கு உதவுவதற்காக நேற்று முதல் இந்த வெள்ளிக்கிழமை வரை தடுப்பு காவலில் வைக்கப் பட்டுள்ளார்,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இன்னும் பிடிப்படாத சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், சம்பவத்திற்கான காரணத்தை அடையாளம் காண முடியவில்லை என்றும் முகமட் சைட் கூறினார்.

“இந்த வழக்கு தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள ஏதேனும் ஒரு காவல் நிலையத்திற்கு வருமாறு அல்லது விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முவாஸ் மஸ்லானை 017-9788804 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார். .

இச்சம்பவம் தொடர்பாக 16 வினாடிகள் கொண்ட வீடியோ பதிவு சமூக ஊடக தளமான முகநூலில் வைரலானது.

– பெர்னாமா


Pengarang :