NATIONAL

காய்கறிகளுக்கு உச்சவரம்பு விலையை நிர்ணயிக்கும் திட்டமில்லை

கோலாலம்பூர், மார்ச் 19 – சந்தையில் காய்கறிகளின் விலை 25 விழுக்காடு வரை உயர்வு காணும் என எதிர்பார்க்கப் படும் நிலையில் அந்த உணவுப் பொருட்களுக்கு உச்சவரம்பு விலை அல்லது கட்டுப்பாடு விதிக்கும் திட்டத்தை உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு கொண்டிருக்கவில்லை.

காய்கறிகளின் விலையை வரம்பு மீறி உயர்த்தும் வணிகர்களை அமைச்சு கண்காணித்து வரும் என்பதோடு தவறிழைப்போருக்கு எதிராக கொள்ளை லாபச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கையும் எடுக்கும் என்று அதன் துணையமைச்சர்பௌஸியா சாலே கூறினார்.

அமைச்சு எந்த கட்டுப்பாட்டையும் உச்சவரம்பு விலையையும் நிர்ணயிக்காது. ஆனால் அதிகப்படியான லாபம் சம்பாதிக்கும் முயற்சிகளைத் தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அவர் சொன்னார்.

விநியோகச் சங்கிலி காய்கறி பயிரிடுவோர் தொடங்கி உற்பத்திச் செலவினம், போக்குவரத்து ஆகியவற்றோடு மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் வரை தொடர்கிறது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது காய்கறிகளின் விலை 25 விழுக்காடு வரை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக காய்கறி உற்பத்தியாளர்கள் கூறியுள்ளது தொடர்பில் கருத்துரைத்த போது அவர் இவ்வாறு கூறினார்.

முன்னதாக அவர், 2024 தேசிய ரமலான் உணவு சேமிப்புத் திட்டத்தை தொடங்கி வைத்ததோடு இங்குள்ள ஜாலான் ராஜா ஆலாங்கில் ரஹ்மா ரமலான் சந்தையையும் பார்வையிட்டார்.

இதனிடையே, மைசேவ்ஃபூட் திட்டம் குறித்து கருத்துரைத்த துணையமைச்சர் கூட்டரசு பிரதேசத்தில் உள்ள 11  ரமலான் சந்தைகள் உள்பட நாடு முழுவதும் உள்ள 75 சந்தைகளில் இந்த திட்டம் அமல்படுத்தப் படுவதாகக் கூறினார்.


Pengarang :