NATIONAL

காலுறை சர்ச்சை-மாநில அளவிலான சோதனை நடவடிக்கையை சிலாங்கூர் அரசு மேற்கொள்ளும்

ஷா ஆலம், மார்ச் 22 –  இஸ்லாத்தை அவமதிக்கும் கூறுகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த   மாநிலத்தில் உள்ள வணிக வளாகங்களில் குறிப்பாகக் கே.கே. மார்ட் கடைகளில்  சிலாங்கூர் அரசு சோதனைகளை நடத்தும்.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பண்டார் சன்வே கே.கே.மார்ட் பல்பொருள் அங்காடிக் கடை  கிளையில் “அல்லாஹ்” என்ற வாசகம் எழுதப்பட்ட காலுறைகளின் விற்பனை தொடர்பில் சமீபத்தில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை  மேற்கொள்ளப்படுகிறது

இச்சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் தழுவிய சோதனைகளை தீவிரப்படுத்துவது குறித்து இஸ்லாமிய  விவகாரங்களுக்கான மாநில  ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் ஃபாஹ்மி ங்காவுடன் நேற்று தாம்  கலந்துரையாடியதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை கே.கே.மார்ட் தரப்பினர் நிரூபிக்க வேண்டும். அதே நேரத்தில் நாங்கள் திடீர்  சோதனைகளை மேற் கொள்வோம். இதுபோன்ற பொருட்கள்  கையிருப்புக்கள் இருந்தால் உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இது மற்ற வணிக வளாகங்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமைகிறது. அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதோடு கவனக்குறைவாக  இருப்பதையும்  தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.

மலேசியர்களின்  உணர்வுகளைக் கருத்தில்  கொள்ளாமல் தன்னிச்சையான நடவடிக்கைகள் எதுவும் இருக்காது என்று நான் நம்புகிறேன் என்று மாநிலத் தலைமைச் செயலகக் கட்டிடத்தில் இன்று நடைபெற்ற  மாநில அரசு ஊழியர்களுடனான மஹாபா ரமலான் மடாணி நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்

முன்னதாக அவர் தனது உரையில், சிலாங்கூரில்  மேற்கொள்ளப்டும் வணிக நடவடிக்கைகளில் இஸ்லாத்தை அவமதிக்கும் கூறுகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்வதில் மாநில அரசு கவனம் செலுத்துகிறது என்று  சொன்னார்.

கே.கே. மார்ட்டின் முக்கிய தொழிற்சாலை ஜொகூரில் உள்ள பத்து பஹாட்டில் அமைந்திருந்தாலும் இதேபோன்ற சர்ச்சைக்குரிய  பொருட்கள் வேறு எங்கும் விற்க படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அமலாக்கமும் ஆய்வும் அவசியம் என்றார் அவர்.

இந்த சர்ச்சைக்குரிய விவகாரம்  முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருந்தாலும்  பிற மதங்களை அவமதிக்கும் வகையில் அல்லது இனப் பதற்றத்தைத் தூண்டும் வகையிலான பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது  என்றும் அமிருடின் நினைவுபடுத்தினார்.

கடைகளை எரிக்க அல்லது தகர்க்க கோரிக்கை விடுக்கப் படுவதைக் காண   நான் விரும்பவில்லை. நீங்கள் புறக்கணிக்க விரும்பினால் அது உங்களைப் பொறுத்தது. ஆம், பிரச்சனை எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால் சினமூட்டும் வகையிலும்  கவலையை ஏற்படுத்தும் விதமாகவும் நாம் பதிலளிக்கக் கூடாது என்றார் அவர்.


Pengarang :