NATIONAL

தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோருக்குச் சிகிச்சையளிப்பதில் அரசு தீவிர கவனம்

புத்ராஜெயா, மார்ச் 22 – தற்கொலை உள்ளிட்ட மனநலப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு தண்டனையை விட சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதில் அரசு தீவிர கவனம் செலுத்துகிறது என்று பிரதமர் துறை அமைச்சர் (சட்ட மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தம்) டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் கூறினார்.

தற்கொலைக்கு முயன்றவர்களை மருத்துவச் சிகிச்சை பெற ஊக்குவிப்பதற்கு ஏதுவாக  தற்கொலைக்கு முயற்சிக்குத்  தண்டனை வழங்குவது தொடர்பான தண்டனைச் சட்டத்தின் 309வது பிரிவு   கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

தங்களுக்கு எதிராக  குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும், குற்றஞ்சாட்டப்படும், கைது நடவடிக்கை  அல்லது விசாரணைக்கு  ஆளாக நேரிடும் என்று அவர்கள் இனி அஞ்ச வேண்டியதில்லை என்று அவர் சொன்னார்.

தண்டனைக்குரிய அணுகுமுறையிலிருந்து மறுவாழ்வு அணுகுமுறைக்கு  மடாணி அரசாங்கம்  நகர்வதை இது காட்டுகிறது.

தற்கொலை முயற்சியை குற்றமற்றதாக ஆக்குவது  மக்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க மடாணி அரசு எடுத்த ஒரு முக்கியமான நடவடிக்கையாகும்  என்று அவர் இன்று ‘தற்கொலையை குற்றமற்றதாக ஆக்குதல்’  எனும் வெபினார் சினார் ரமலான் நிகழ்ச்சிக்கு வழங்கிய உரையில் கூறினார்.

அமைச்சர்  அசாலினாவின் உரையை பிரதமர் அமைச்சர் துறை துணையமைச்சர்  (சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தம்) எம்.குல சேகரன் வாசித்தார்.

தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வோம் என்ற  பயம் இல்லாமல் சிகிச்சை பெற சிறந்த வாய்ப்பு இருக்கும் என்று அஸ்லினா கூறினார்.

இந்த  நடவடிக்கை எதிர்காலத்தில் தற்கொலை முயற்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று அவர் கூறினார்.


Pengarang :