NATIONAL

துப்பாக்கி, தோட்டாக்களைக் காரில் மறைத்து வைத்திருந்த தொழில்நுட்பர் கைது

ஷா ஆலம், மார்ச் 25 –  தெலுக் பங்ளிமா காராங்கிலுள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டாக்களை மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம்  தொடர்பில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கோல லங்காட் மாவட்ட போக்குவரத்து போலீசார் இன்று அதிகாலை 2.40 மணியளவில் அந்த பெட்ரோல் நிலையத்தில் இருந்த கார் ஒன்றில் நடத்திய சோதனையில் அந்த சுடும் ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டதாக  கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரிடுவான் அகமது நோர்@ சாலே கூறினார்.

காரின் அடியில் துப்பாக்கியும் ஆறு தோட்டாக்களும் மறைத்து வைக்கப்படிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தொழிற்சாலை ஒன்றில் தொழில்நுட்பராகப் பணிபுரியும் அந்த  24 வயது  ஆடவர் கைது செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

கைது செய்யப்பட்ட  அந்த ஆடவர் கொடுத்த தகவலின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் 40 நிமிடங்களுக்குப் பின்னர் லோரி ஓட்டுநரான மற்றொரு நபரைக் கைது செய்தனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால்  ஏழாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே  விதிக்க வகை செய்யும் 1960ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டத்தின் 8(ஏ) பிரிவின்  இச்சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :