NATIONAL

ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் வறட்சி நிலை குறையும்- மாலை வேளைகளில் மழை பெய்யும்

கோலாலம்பூர், மார்ச் 25 – எதிர்வரும் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் பருவமழை மாற்றம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் நாட்டில் தற்போது நிலவி வரும் வெப்ப மற்றும் வறண்ட வானிலை அப்போது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவ மழை முதல் தென்மேற்கு பருவமழை வரை காற்றின் திசையில் மாற்றம் ஏற்படும் போது இந்த சூழல் உருவாகும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தேசிய வானிலை மற்றும் புவி இயற்பியல் நடவடிக்கை மையத்தின் இயக்குநர் மக்ரூன் பாட்சில் முகமது பாஹ்மி கூறினார்.

வழக்கமாக, பருவ மழை மாற்றத்தின் போது காற்று வீசும் முறை மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியத்தை உருவாக்குகிறது. எதிர்வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இந்நிலை உண்டாகும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

(வெப்ப மற்றும் வறண்ட வானிலை) இன்னும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கும். ஆனால், (பருவநிலை மாற்றக் கட்டத்தில்)  மழைப் பொழிவு அதிகமாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். தற்போதுள்ள அதிகப்பட்ச  உஷ்ணத்தை இது தணிக்கும் என்று பெர்னாமா டிவியில் ஒளிபரப்பான ‘அப்பா காபார் மலேசியா‘ நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய வெப்ப காலத்தில் அதிகப்பட்ச உஷ்ணத்தின் தாக்கத்தை தவிர்ப்பதற்கு ஏதுவாக பொது மக்கள் பொருத்தமான உடைகளை அணிய வேண்டும் என்பதோடு வெளி நடவடிக்கைகளையும் குறைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அவசியம் ஏற்படும் பட்சத்தில் செயற்கை மழையை பெய்விப்பதற்கான நடவடிக்கைகளை  மேற்கொள்ள மலேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்துடன் (நட்மா) வானிலை ஆய்வுத் துறை தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :