ANTARABANGSAECONOMY

பிரதமர் அன்வாருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

புத்ராஜெயா, மார்ச் 28- மலேசியாவுக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் பிரதமர் அலுவலகம் வந்த ஜெய்சங்கர், பின்னர் பிரதமருடனான சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கு நீடித்தது.

இந்த சந்திப்பின் போது வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, விவசாயம், சுற்றுலா, தற்காப்பு மற்றும் இலக்கவியல், மியன்மார் உள்ளிட்ட வட்டார விவகாரங்கள் குறித்து பிரதமர் அன்வார், ஜெய்சங்கருடன் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டதாக பிரதமர் துறை கூறியது.

இந்திய தொழில்நுட்பக் கல்லூரியின் (ஐ.ஐ.டி.) கிளை வளாகத்தை மலேசியாவில் அமைப்பதற்கான அரசின் கடப்பாட்டையும் பிரதமர் உறுதிப்படுத்தியதாகவும் அவர் சொன்னார்.

 

மலேசியா அரிசி பற்றாக்குறையை எதிர்நோக்கியிருந்த சமயத்தில் உதவிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொண்ட பிரதமர், இந்தியாவிலிருந்து விவசாயப் பொருள்களை இறக்குமதி செய்வதற்குரிய வாய்ப்பு மீண்டும் ஏற்படும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, இந்திய-ஆசியான் உறவை குறிப்பாக ஆசியான் அமைப்பின் தலைவராக மலேசியா அடுத்தாண்டு பொறுப்பேற்கும் போது மேலும் வலுப்படுத்துவதற்கான விருப்பத்தை ஜெய்சங்கர் இக்கூட்டத்தின் போது எடுத்துரைத்தார்.

அதே சமயம், இந்தியாவுக்கு வரும்படி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பையும் ஜெய்சங்கர் மீண்டும் மறுவுறுதிப்படுத்தினார்.

இந்த சந்திப்பின் போது விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு மற்றும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சர் லியு சின் தோங் ஆகியோரும் உடனிருந்தனர்.


Pengarang :