அலட்சியம் காரணமாக மூன்று வயதுச் சிறுமி  உயிரிழப்பு- ஆடவர் கைது

சிரம்பான், மார்ச் 28 – மூன்று வயது சிறுமிக்கு மரணம் ஏற்படும் அளவுக்கு  அலட்சியமாகச் செயல்பட்டது தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு ஆடவர் ஒருவரை போர்ட்டிக்சன்,  பண்டார் சுங்காலாவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) போலீஸார் கைது செய்தனர்.

வாகனத்திலிருந்து விழுந்த சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பது தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) போர்ட்டிக்சன் மருத்துவமனையிலிருந்து  தங்களுக்கு புகார்  கிடைத்ததாக  போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன்  அய்டி ஷாம் முகமது கூறினார்.

பாதிக்கப்பட்டச் சிறுமியின் 38 வயது தாயின் காதலன் என்று கூறப்படும் சந்தேக நபர் கடந்த மார்ச் 15 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில்  தெலுக் கெமாங்,   தாமான் மாயோங்கிலிருந்து தாமான்  அங்கிரிக் செல்லும் வழியில் ஒரு கடையின் முன் தனது  வேனை நிறுத்தி கதவைத் திறக்க முயன்றபோது,  இச்சம்பவம் நடந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது என அவர் குறிப்பிட்டார்.

வேனிலிருந்து கீழே விழுந்த அச்சிறுமியின் உடலின் பல பாகங்களில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன. மார்ச் 26 அன்று மாலை 6.04 மணியளவில் துவாங்கு ஜாபர் மருத்துவமனையில் அக்குழந்தை  இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபருக்கு போதைப்பொருள் பழக்கமில்லை என்பது சோதனையில் தெரிவந்ததாக கூறிய அவர், எனினும், அவருக்கு  முந்தைய மூன்று குற்றப் பதிவுகள் இருப்பது  கண்டறியப்பட்டது எனக் கூறினார்.

2001ஆம் ஆண்டுச் சிறார் சட்டத்தின் பிரிவு 31 (1) (ஏ) இன் கீழ் விசாரணைக்காக சந்தேக நபர் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை ஆறு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


Pengarang :