NATIONAL

சவ ஊர்வலத்தின் போது சாலையில் பட்டாசு வெடித்த ஆடவர் கைது

ஷா ஆலம், மார்ச் 29 – சவ ஊர்வலத்தின் போது சாலையில் பட்டாசு
வெடித்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கைது
செய்துள்ளனர். இச்சம்பவம் பந்திங்கில் உள்ள பேரங்காடி ஒன்றின் எதிரே
நேற்று நிகழ்ந்தது.

பட்டறை உதவியாளரான 28 வயதுடைய அந்த ஆடவர் பந்திங்
வட்டாரத்தில் நேற்று மாலை 3.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக
கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ரிட்வான்
முகமது நோர் சாலே கூறினார்.

கைது செய்யப்பட்ட அந்த ஆடவரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையில்
அவர் எம்பித்தமின் மற்றும் மெத்தம்பெத்தமின் போதைப் பொருளைப்
பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

அவ்வாடவர் மேல் நடவடிக்கைக்காக பந்திங் காவல் நிலையத்தில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளார். குற்றவியல் மற்றும் போதைப் பொருள் தொடர்பான
முந்தைய குற்றப்பதிவுகளை அவர் கொண்டிருப்பது தொடக்கக் கட்ட
சோதனையில் தெரியவந்துள்ளது என்று நேற்று இங்கு வெளியிட்ட
அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

இது தவிர, சாலைப் போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் மூன்று
குற்றப்பதிவுகளை கோல லங்காட் மாவட்ட சாலை போக்குவரத்துத் துறை
அவ்வாடவருக்கு எதிராக வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கைதான ஆடவருக்கு எதிராக 1957ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டத்தின்
8வது பிரிவு மற்றும் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள்
சட்டத்தின் 15(1)(ஏ) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
என்றார் அவர்.

சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட இச்சம்பவம் தொடர்பில் மேலும்
இரு ஆடவர்களைத் தாங்கள் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.


Pengarang :