NATIONAL

ஏ.டி.எம். கார்டு மோசடிக் கும்பல் முறியடிப்பு- இரு வங்கி அதிகாரிகள் உள்பட 16 பேர் கைது

ஷா ஆலம், மார்ச் 29 – மோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும்
நோக்கில் ஏ.டி.எம். எனப்படும் தானியங்கி பணப் பட்டுவாடா கார்டுகளை
விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றை
வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

கடந்த வாரம் கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் கோம்பாக் வட்டாரத்தில்
மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனை நடவடிக்கைகளில் இரு வங்கி
அதிகாரிகள் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து
இக்கும்பலின் மோசடி நடவடிக்கை அம்பலத்திற்கு வந்தது.

கைது செய்யப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட மூன்று
பெண்கள் உள்ளிட்ட 15 மலேசியர்கள் மற்றும் ஒரு நைஜீரிய பெண்
ஆகியோரும் அடங்குவர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர்
டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

கிள்ளான் பள்ளத்தாக்கு வட்டாரத்தில் ஏ.டி.எம். கார்டுகளை வாங்கி விற்கும்
நடவடிக்கையில் இக்கும்பல் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளதாகக் கூறிய
அவர், ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் வங்கி கணக்குகளை 1,000 முதல் 1,500
வெள்ளி விலையில் வாங்கி மோசடிக் கும்பலிடம் 8,000 வெள்ளி வரை
இக்கும்பல் விற்று வந்துள்ளது என்றார்.

கைதான இரு வங்கி அதிகாரிகள் குறித்து கருத்துரைத்த அவர், கடந்த
ஆறு மாத காலத்தில் 40 வங்கிக் கணக்குகளைத் திறக்க இவ்விவரும்
உதவியுள்ளதாகவும் தாங்கள் பரிசீலிக்கும் ஒவ்வொரு ஏ.டி.எம். கார்டுக்கும்
250 வெள்ளியை கட்டணமாகப் பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சோதனையின் போது ஐந்து வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. 23
லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட 15 இணைய மோசடிச் சம்பவங்களில் இந்த
வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.

இவ்வாண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சிலாங்கூர்,
கோலாலம்பூர், கெடா, பேராக், ஜோகூர் ஆகிய மாநிலங்களில் இந்த
பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :