ECONOMYPENDIDIKAN

ஜூஸ் பான வடிவில் போதைப் பொருள் விநியோகம்- போலீஸ் நடவடிக்கையில் ஆடவர் கைது

குவாந்தான், ஏப் 13- குவாந்தான் வட்டாரத்திலுள்ள பொழுதுபோக்கு மையங்களில் ஜூஸ் பான வடிவில் போதைப் பொருளை விநியோகித்து வந்த கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர். இந்த போதைப் பொருள் விநியோகம் தொடர்பில் நகரிலுள்ள இரு இடங்களில் அதிரடிச் சோதனை நடத்திய போலீசார் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்தனர்.

நள்ளிரவு 12.10 அளவில் பகாங் மாநில போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர்  மேற்கொண்ட அந்த சோதனையில் 42 வயது ஆடவர் தடுத்து வைக்கப்பட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யாஹ்யா ஓத்மான் கூறினார்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது போதைப் பொருள் கலக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5.27 கிலோ மற்றும் 17.9 லிட்டர் அளவிலான  50 கப் ஜூஸ் பானம் மற்றும் 75 பாக்கெட் பானம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு 35,300 வெள்ளியாகும் என அவர் சொன்னார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில் அவர் மெத்தம்பெத்தமின் போதைப் பொருளை உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவ்வாடவர் போதைப் பொருள் தொடர்பான ஏழு குற்றப்பதிவுகளையும்  கொண்டுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

அவ்வாடவருக்கு எதிராக 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சட்டப் பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்கு கட்டாய மரண தண்டனை அல்லது ஆயுள் காலச் சிறை மற்றும் 15க்கும் மேற்போகாத பிரம்படி வழங்கப்படும்.


Pengarang :