விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு- போக்குவரத்து அமைச்சு பரிசீலனை

கோலாலம்பூர், ஏப் 16- நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் அரச மலேசிய போலீஸ் படை மற்றும்  தேசிய பாதுகாப்பு மன்றம் உள்ளிட்டத் தரப்பினரின் ஆலோசனையை போக்குவரத்து அமைச்சு  பெறும்.
பட்டாசு, சுடும் ஆயுதம் போன்ற தடை செய்யப்பட்ட பொருள்களை பொது மக்கள் விமான நிலையத்திற்குள்  கொண்டு வருவதைத் தடுக்க ஸ்கேனர் கருவியை விமான நிலைய நிர்வாகத்தினர் பொருத்துவது தொடர்பான பரிந்துரையும்  அதில் அடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
விமான நிலையத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பான எந்த நடவடிக்கையும் காவல் துறை, தேசிய பாதுகாப்பு மன்றம்  மற்றும்  விமான நிலைய நடத்துநரான மலேசிய ஏர்போர்ட் பெர்ஹாட் ஆகிய தரப்பினருடனான விவாதத்திற்குப் பின்னரே எடுக்க முடியும் என்று  அவர் குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் விவாதம் நடத்தும் பொறுப்பை அவர்களிடமே விட்டு விடுகிறேன். இது விமான நிலையத்தின் செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளதால் இது குறித்து விரிவான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். பின்னரே அமைச்சு  இதில் தலையிடும் என அவர் சொன்னார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முதலாம் முனையத்தில் நிகழ்ந்த  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த போது அவர் இவ்வாறு சொன்னார்.
அதிகாலை 1.30 மணியளவில் நிகழ்ந்த  இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேக நபரின் மனைவியின் பாதுகாவலர் ஒருவர்  காயமடைந்தார்.

Pengarang :