NATIONAL

குனோங் ருவாங் எரிமலைக் குமுறல்- சபா, சரவாவுக்கான விமானச் சேவைகள் ரத்து

கோத்தா கினாபாலு, ஏப் 18- இந்தோனேசியாவின் குனோங் ருவாங் எரிமலைக் குமுறத் தொடங்கியுள்ள நிலையில்  கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கும் சபா, சரவா மாநிலங்களுக்கும் இடையிலான சில பயணச் சேவைகளை மலேசியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் ஆசியா விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.

சில விமானச் சேவைகள் ரத்து செய்யப் பட்டுள்ளதை தனது எக்ஸ் தளம் மூலம் உறுதிப்படுத்திய மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமானச் சேவை தொடர்பான ஆகக் கடைசி நிலவரங்களை சரி பார்த்துக் கொள்ளும்படி பயணிகளைக் கேட்டுக் கொண்டது.

குனோங் ருவாங் எரிமலைக் குமுறல் காரணமாக 2024 ஏப்ரல் 18ஆம் தேதி பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. இந்தோனேசியாவின் குனோங் ருவாங்கில் ஏற்பட்ட இந்த எரிமலை வெடிப்பின் எதிரொலியாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கும் சபா மற்றும் சரவாவுக்கும் இடையிலான பல விமானச் சேவைகளை மலேசியன் ஏர்லைன்ஸ் ரத்து செய்துள்ளது என அந்த அறிக்கை கூறியது.

இதனிடையே, மறைந்த சபா பெர்சத்து ராக்யாட் கட்சியின் நிறுவனர் டான்ஸ்ரீ ஜோசப் குருப்பின் நல்லுடலை கோத்தா கினாபாலுவுக்கு இன்று கொண்டு வரும் திட்டம் ரத்து செய்யப் பட்டுள்ளதாக சபா மாநில விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு துணையமைச்சர் அலுவலகம் தெரிவித்தது.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கும் தாவாவ் நகருக்கும் இடையிலான எட்டு விமானச் சேவைகளை தாங்கள் ரத்து செய்துள்ளதாக ஏர் ஆசியா நிறுவனம் கூறியது. மேலும், கோலாலம்பூர்-கோத்தா கினாபாலு இடையிலான எட்டு பயணச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ன என்று அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.


Pengarang :