ANTARABANGSA

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்

வாஷிங்டன், ஏப் 19 – இஸ்ரேல் ஏவுகணைகள் ஈரானில் உள்ள ஒரு தளத்தைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி ஏபிசி நியூஸ் செய்தி நிறுவனம் நேற்று பின்னேரம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆளில்லா விமானத் தாக்குதலை தாங்கள் நடத்திய சில நாட்களுக்குப் பிறகு நாட்டின் மையப் பகுதியில் வெடிப்பு ஏற்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் செய்தி கூறியது

ஈரானின் மத்திய நகரமான இஸ்பஹானில் உள்ள விமான நிலையத்தில் வெடிச் சத்தம் கேட்டதாகவும் எனினும், அதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றும் ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இதனிடையே, இஸ்பஹான், ஷிராஸ் மற்றும் தெஹ்ரான் நகரங்களுக்கு உயரே விமானங்கள் பறப்பதை ஈரான் நிறுத்தியுள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தின் மையப் பகுதியான நடான்ஸ் உட்பட பல ஈரானிய அணுசக்தி தளங்கள் இஸ்பஹான் மாநிலத்தில் அமைந்துள்ளன.

தெஹ்ரானின் இமாம் கொமேனி அனைத்துலக விமான நிலையம் உள்ளூர் நேரப்படி காலை 7.00 மணி வரை அனைத்து விமானங்களுக்கும் மூடப்பட்டதாக அமெரிக்க கூட்டரசு வான் போக்குவரத்து நிர்வாகம் தனது தரவுத்தளத்தில் வெளியிட்ட விமானப்படையினருக்கான அறிவிப்பில் கூறியது.

இன்று அதிகாலை ஈரானின் மீது பறந்து கொண்டிருந்த சில எமிரேட்ஸ் மற்றும் ஃப்ளைதுபாய் விமானங்கள் வான்வெளியில் இருந்து திடீர் திரும்பியதை Flightradar24 என்ற விமான பயணக் கண்காணிப்பு இணையதளம் காட்டியது

சிரியாவில் உள்ள தனது தூதரக வளாகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும்
ஏவுகணைகளைக் கொண்டு வார இறுதியில் ஈரான் தாக்கியது. எனினும், பெரும்பாலான ஈரானிய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் இஸ்ரேல் எல்லையை அடைவதற்கு முன்னரே வீழ்த்தப்பட்டன


Pengarang :