மச்சாங், ஏப் 21- இங்குள்ள பூலாய் சொண்டோங், கம்போங் பாகான் மணல் எடுக்கும் பகுதியில் நேற்றிரவு தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
முகமது ஃபஹ்மி அட்லான் முகமது ஃபைசுல் அஸ்லி என்ற அந்த பதின்ம வயது இளைஞரின் உடல் கிராமவாசிகளால் நேற்று பிற்பகல் 12.25 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக மாச்சாங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் அகமது ஷாஃபிகி ஹூசேன் கூறினார்.
பாதிக்கப்பட்ட இளைஞரும் இதர ஐந்து நண்பர்களும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட உடையை எடுப்பதற்காக மற்றொரு நண்பருடன் நீரில் நீந்திச் சென்ற போது முகமது ஃபஹ்மி திடிரென மூழ்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிராம மக்களால் மீட்கப்பட்ட அகமது ஷஃபிகியை பூலாய் சொண்டோங் சுகாதார கிளினிக்கின் சுகாதார அதிகாரிகள் சோதனை செய்து அவர் உயிரிழந்து விட்டதை
உறுதிப்படுத்தினர். மூச்சுத்திணறல் காரணமாக அந்த இளைஞருக்கு மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்றார் அவர்.
அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க தங்கள் பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவையும் எப்போதும் கண்காணிக்குமாறு பொதுமக்களுக்கு, குறிப்பாக பெற்றோர்களுக்கு மற்றும் காவல் துறை அறிவுறுத்துகிறது என்று அவர் கூறினார்.