ECONOMYMEDIA STATEMENT

மானிய விலை டீசல்  மோசடிக் கும்பல் முறியடிப்பு- இருவர் கைது

புத்ராஜெயா, ஏப் 21- கிள்ளான் வட்டாரத்திலுள்ள ஒரு  இடத்தில் மானிய விலை டீசல் எரிபொருளை மோசடி செய்த ஒரு கும்பலை உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் சிலாங்கூர் மாநிலப் பிரிவு கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி  முறியடித்தது.

அமைச்சின் புத்ராஜெயாவைச் சேர்ந்த சட்ட அமலாக்கக் குழு நடத்திய அந்த சோதனையில் 48 மற்றும் 67 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதிகாரிகளை ஏமாற்ற போலி வாகனப் பதிவு எண்களைப் பயன்படுத்துவது இந்த மோசடி கும்பலின் வழக்கமான பாணியாகும்  என்று   உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோ அஸ்மான் ஆடாம் கூறினார்.

மானிய விலை டீசலை கறுப்புச் சந்தையில் விற்பதற்கு முன்பு அதனை சேமித்து வைக்கும் இடமாக ஒரு கிடங்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்றும் சொன்னார்.

அந்த வளாகத்தை சோதனை செய்ததில்  9,000 லிட்டர் டீசல், லோரி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு 88,300  வெள்ளியாகும் என மதிப்பிடப்படடுவதாகக் கூறிய அவர்,  டீசல் விநியோகச் சங்கிலியில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் அல்லது நிறுவனங்களை அடையாளம் காண்பதற்காக  1961ஆம் ஆண்டு விநியோகச் சட்டத்தின் (சட்டம் 122)   கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது என்றார்.

மேலும், 2001ஆம் ஆண்டு பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கை வருமானச் சட்டத்தின் கீழ் இத்தகைய மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள் விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :