MEDIA STATEMENTNATIONAL

சீர்திருத்தம் மக்களுக்கு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்- கெஅடிலான் மாநாட்டில் சைபுடின் வலியுறுத்து

ஷா ஆலம், ஏப் 21- அதிகாரத்தில் இருக்கும் இத்தருணத்தில் மக்களுக்கு பலனளிக்கக் கூடிய மிகப்பெரிய மாற்றங்களை அமல்படுத்துவதன் மூலம் சீர்திருத்தத்திற்கான தனது கடப்பாட்டை கெஅடிலான் கட்சி நிலைநிறுத்த வேண்டும் என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.

அதிகார ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்தும் முயற்சிகளால் கெஅடிலான் கட்சி தனது இலக்கிலிருந்து விலகி விடக்கூடாது. மாறாக, மக்களுக்கு பயன் தரக்கூடிய கட்டமைப்பு மாற்றங்களைக் கொண்டு வருவதில் அது தனது கவனத்தை தொடர்ந்து செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

சீர்திருத்தத்தின் வெற்றி என்பது மக்களுக்கு நன்மை தரும் நோக்கில்  அமல்படுத்தக் கூடிய திட்டங்கள் மற்றும் கொள்கைகளைக்  கொண்டு  மக்களாலும் கட்சி உறுப்பினர்கள் மதிப்பிடப்படும் ஒரு விஷயமாகும் என்பதை இங்கு நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

கட்சியிடம் எத்தனை அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளனர்? எத்தனை மாநிலங்கள் நமது கட்டுப்பாட்டில் உள்ளன? எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள், எத்தனை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்? என்பது ஒருபோதும் அளவீடாக இருக்கக்கூடாது என்றும் அவர் நினைவூட்டினார்.

இங்குள்ள ஷா ஆலம் ஐடியல் மாநாட்டு மையத்தில் இன்று நடைபெறும் கெஅடிலான் கட்சியின் 25ஆம் ஆண்டு நிறைவு விழாவில் சுமார் 3,500 பேராளர்கள் மத்தியில் உரையாற்றிய போது சைபுடின் இவ்வாறு சொன்னார்.

பொருள் பொதிந்த மாற்றங்கள் ‘வலிமிகுந்ததாக‘ இருக்கும். ஆனால், நாடு சவால்மிக்க நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையிலும் பெரும் கடன் மற்றும் வரம்புக்குட்பட்ட வருமானத்திற்கு மத்தியில் கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திலும் குறுகிய காலத்திற்கு வலி தரக்கூடிய அந்த மாற்றங்களை  நிறைவேற்றுவது அவசியமாகும் என அவர் கூறினார்.

நுண்ம அளவில் பார்க்கையில், நாட்டை அதீத கவனத்துடன் நிர்வகிக்க வேண்டியுள்ளது.  நாம் அமல்படுத்தும் சில மாற்றங்கள் குறுகிய காலத்திற்கு இன்னல் தரக் கூடியவையாக இருக்கும். ஆயினும் நாம் எடுக்க வேண்டிய சரியான முடிவு இதுவாகும் என்றார் அவர்.


Pengarang :