ECONOMYMEDIA STATEMENT

16 வது பொதுத் தேர்தலுக்கான தயார் நிலைப் பணிகளை தொடக்கியது கெஅடிலான் 

ஷா ஆலம், ஏப் 21- வரும் 16வது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கான தயார் நிலைப் பணிகளை கெஅடிலான் கட்சி இன்று தொடக்கியது.

அடிமட்டம் தொடங்கி உயர்மட்டம் வரையிலான கட்சியின் அனைத்து நிலைகளையும் வலுப்படுத்துவது மற்றும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக நீடிப்பதை உறுதி செய்வது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் பொதுத் தேர்தலுக்கு ஈராண்டுகளுக்கு முன்னரே இந்த தேர்தல் தயார் நிலை ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கட்சியின் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி கூறினார்.

ஆகவேதான், இந்த மாநாடு மற்ற கட்சிகளை விட மாறுபட்டுள்ளது. மற்றவர்கள் வெள்ளி விழாவை மகிழ்ச்சிகரமான ஒரு நிகழ்வாக கொண்டாடுவார்கள். ஆனால் நாம் இன்றைய தினத்தில் தேர்தல் பணிகளைத் தொடக்குகிறோம் என்று அவர் சொன்னார்.

கெஅடிலான் கட்சியின் தேர்தல் முன்னேற்பாடுகள் இன்று தொடங்குகின்றன. நமக்கு நீண்ட கால அவகாசம் இல்லை என்று இன்று இங்கு கெஅடிலான் கட்சியின் 25ஆம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில், 16வது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக கட்சி இரு புதிய செயல் திட்டங்களை வரைந்துள்ளது. கெஅடிலான் மெனாங் 16 (கெமாஸ் 16) மற்றும் பெமேர்காசஹான் ஆர்கனசாசி பார்ட்டி 25 (போப் 25) ஆகியவையே அவ்விரு திட்டங்களாகும் என்று அவர் சொன்னார்.

இவ்விரு செயல் திட்டங்களும் கெஅடிலான் கட்சியை வெறும் அரசியல் கட்சி என்ற முறையில் மட்டுமல்லாது சமூக முனைப்பு சார்ந்த சமூகநல அமைப்பாகவும் மாற்றியமைக்கும் என்று அவர் கூறினார்.

நாம் 20 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். பேரணி நடத்துவது, பிரசார உரை நிகழ்த்துவது, மற்றும் ஊடகங்களைப் பயன்படுத்துவது உள்பட பல்வேறு துறைகளில் நாம் திறன் பெற்று விட்டோம். நாம் உருவாக்கிய ஆற்றல்களை இப்போது எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன என்றார் அவர்.

இதன் காரணமாகத்தான் நாம் இரு புதிய செயல் திட்டங்களை வரைந்துள்ளோம் .அடிமட்டம் தொடங்கி உயர் மட்டம் வரை கட்சியை மீண்டும் வலுப்படுத்துவதை இது நோக்கமாக கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :