ANTARABANGSA

சிரியாவிலுள்ள  அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈராக்கிலிருந்து தாக்குதல்

மொசூல், ஏப் 22 – ஈராக்கின் ஜும்மர் நகரிலிருந்து   வடகிழக்கு  சிரியாவில்  உள்ள அமெரிக்க  ராணுவ  தளத்தை   நோக்கி  நேற்று குறைந்தது 5  ராக்கெட்டுகள்  ஏவப்பட்டதாக  ஈராக் பாதுகாப்பு  வட்டாரங்கள்  மற்றும் அமெரிக்க அதிகாரி ஒருவரிடமிருந்து ராய்ட்டர்ஸ் தகவலைப் பெற்றது.

ஈராக்கில் உள்ள  ஈரானிய ஆதரவு குழுக்கள் அமெரிக்க துருப்புகளுக்கு எதிரான தாக்குதல்களை கடந்த பிப்ரவரி தொடக்கத்தில் நிறுத்தியப் பிறகு  அந்நாட்டுப் படைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முதலாவது மற்றும் புதியத் தாக்குதல் இதுவாகும்.

ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி அமெரிக்காவிற்கானப்
பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இப்பயணத்தின் போது அவர் அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில்  சந்தித்தார்.

ஈராக்கில் அமெரிக்க தலைமையிலான இராணுவக் கூட்டணியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில்  ஈராக்கில் ஆயுதம் தாங்கிய குழுக்கள்  மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு  தாக்குதல்களை  மீண்டும்  தொடங்க முடிவு செய்ததாக  கதாய்ப் ஹெஸ்புல்லாவடன் தொடர்புடைய டெலிகிராம் வெளிடப்பட்ட ஒரு பதிவு கூறியது.

கதாய்ப் ஹிஸ்புல்லாவுக்கு நெருக்கமான மற்றொரு பிரபலமான டெலிகிராம் குழுவான சப்ரீன் நியூஸ், இத்தாக்குதல் தொடர்பில்  ஈரான் ஆதரவுப் பிரிவினரின் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இல்லை என்று தெரிவித்தது.

சிரியாவின் ருமாலினில் உள்ள ஒரு கூட்டணி தளத்தில் உள்ள துருப்புக்களை
நோக்கி   ஈராக்கிலிருந்து ஐந்துக்கும்  மேற்பட்ட  ராக்கெட்டுகள்  வீசப்பட்டதாகவும்  எனினும் இத்தாக்குதலில்  அமெரிக்க வீரர்கள் யாரும் காயமடையவில்லை என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.

இதனை  “தோல்வியடைந்த ராக்கெட் தாக்குதல்” என்று  அந்த அதிகாரி வர்ணித்தார். ஆனால், அந்த  ராக்கெட்டுகள்   தளத்தைத்  தாக்கத் தவறிவிட்டதா அல்லது அவை அடையும் முன்பே அழிக்கப்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

அதனைத் தொடர்ந்து, ஈராக்  மற்றும்  சிரியாவில்  உள்ள அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் விமானங்கள் பதில் தாக்குதல் நடத்தியதாக அந்த அதிகாரி கூறினார்.


Pengarang :