NATIONAL

கே.கே.பி. தேர்தலில் பெண் வேட்பாளர்- மகளிருக்கு ஒற்றுமை அரசு அளித்த அங்கீகாரம்

கோல குபு பாரு, ஏப் 25- விரைவில் நடைபெறவிருக்கும் கோல குபு பாரு இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசின் வேட்பாளர் வெற்றி பெறுவதை சிலாங்கூர் மாநில  பாரிசான் நேஷனல் உறுதி செய்யும்.

இக்கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெறுவதை உறுதி செய்ய முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்று தாங்கள் வாக்குறுதியளித்துள்ளதாக  மாநில பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ மெகாட் ஜூல்கர்னாய்ன் ஓமார்டின் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் நாங்கள் பல முறை ஒற்றுமை அரசின் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தியுள்ளதோடு வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வதில் எங்களுக்கு உள்ள கடப்பாட்டையும் புலப் படுத்தியுள்ளோம் என்று அவர் சொன்னார்.

தேர்தல் இயந்திரத்தைப் பொறுத்தவரை, மலாய் வாக்காளர்கள் அதிகம் உள்ள பகுதிகளை இலக்காக கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து அம்னோ தலைவர்களையும் களமிறக்கவுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

நேற்று இங்கு நடைபெற்ற ஒற்றுமை அரசின் வேட்பாளரின் அறிமுக நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த தேர்தலில் வீடமைப்பு மள்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங்கின் பத்திரிகை செயலாளரான பாங் சோக் தவோ ( வயது 31) வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்

நேற்று இங்குள்ள தாமான் கேமெலானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்
ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் இந்த வேட்பாளரின்
பெயரை அறிவித்தார். இந்த நிகழ்வில் மாநில ஹராப்பான் தலைவர்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே, இந்த தேர்தல் பிரசாரத்தில் பெண்கள் முதுகெலும்பாக செயல்படுவார்கள் என்று அந்தோணி லோக் கூறினார்.

கடந்த மூன்று தவணைகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது மறைந்த லீ கீ ஹியோங்  ஆற்றிய சேவைகள் அதற்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றன என்று அவர் சொன்னார்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட லீ கீ ஹியோங் (வயது 58) கடந்த மார்ச் 21ஆம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து கோல குபு பாரு  தொகுதியில்  இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

வரும் மே 11ஆம் தேதியை வாக்களிக்கும் நாளாகவும்   வரும் ஏப்ரல்  27ந்தேதி சனிக்கிழமையை வேட்புமனு தாக்கல் தினமாகவும் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.


Pengarang :