NATIONAL

கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகள் வழி இடைத் தேர்தலில் தவறான தோற்றதை ஏற்படுத்த முயற்சி- அமிருடின் சாடல்

சிப்பாங், ஏப் 25- டெங்கில் நில அங்கீகாரம் தொடர்பில் எதிர்க்கட்சி
இயக்கவாதி ஒருவர் சுமத்தி வரும் கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகள்
கோல குபு பாரு இடைத் தேர்தல் சமயத்தில் மக்கள் மத்தியில்
எதிர்மறையான தோற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலானது என
நம்பப்படுகிறது.

பட்ருள்ஹிஷாம் ஷாரின் அல்லது சேகுபார்ட் எனும் அந்த நபர்
தமக்கெதிராக சுமத்தி வரும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை
என்பதோடு எந்த ஆதாரத்தையும் கொண்டிருக்கவில்லை என்று மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ஒரு வேளை அவருக்கு பல அடுக்கு இலக்குகள் இருக்கலாம். பிரச்சனை
என்னவென்றால் ஏற்கனவே பதிலளிக்கப்பட்ட விஷயத்தை மீண்டும்
கிளறுவது, பரபரப்பூட்டும் வகையில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகும்.
ஆனால், இவை யாவும் உண்மையில் வெறும் குப்பைகளாகும் என அவர்
தெரிவித்தார்.

லண்டாசான் லுமாயான் மற்றும் சேகுபார்ட் இடையிலான சட்ட
நடவடிக்கை ஒரு ஓரிரு வாரங்களுக்கு முன்பே தொடங்கி விட்டது. சட்ட
நடவடிக்கைக்கு உட்பட வேறு யாரும் விரும்பினால் தாராளமாக
வாருங்கள் என அவர் சொன்னார்.

மக்களின் பார்வையை திசை திருப்புவதற்கான அவர்களின் வியூகமாக
இதனை நான் பார்க்கிறேன். முன்வைக்கும் சான்றுகள் அடிப்படையற்றவை
என்பது அவருக்கு தெரியும். தவறான தோற்றத்தை ஏற்படுத்தும்
முயற்சியாக மக்களின் கவனத்தை திசை திருப்ப அவர் முயல்கிறார்
என்றார் அவர்.

நேற்று இங்குள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில்
(கே.எல்.ஐ.ஏ.) நடைபெற்ற நிகழ்வில் காவல்துறைக்கு மோபிலிட்டி இ- ஸ்கூட்டர் எனப்படும் மின்சார ஸ்கூட்டர்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :