ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இலக்கிடப்பட்ட டீசல் மானியத் திட்டம் அறிமுகம்- சிறு வணிகர்களுக்கு ரொக்க உதவி- பிரதமர்

ஷா ஆலம், மே 22- எரிபொருளுக்கான இலக்கிடப்பட்ட உதவித் தொகை திட்டத்தை அரசாங்கம் அமல்படுத்தவிருக்கிறது. டீசலை உட்படுத்திய இத்திட்டத்தின் முதல் கட்டம் தீபகற்ப மலேசியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

விவசாயிகள், நெல் சாகுபடி செய்வோர், சிறு வணிகங்களை உட்படுத்திய தேர்ந்தெடுக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு ரொக்க உதவித் தொகையை வழங்குவதற்கும் அரசாஙகம் ஒப்புதல் அளித்துள்ளதாக  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இந்த இலக்கிடப்பட்ட டீசல் மானியத் திட்டத்தின் வழி அரசாங்கம் ஆண்டொன்றுக்கு 400 கோடி வெள்ளியை மிச்சப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார்.

சபா மற்றும் சரவாவில் ஏறக்குறைய அனைத்துக் குடும்பங்களும் டீசல் வாகனங்களைப் பயன்படுத்துவதால் அம்மாநிலத்தில் இந்த இலக்கிடப்பட்ட மானிய டீசல் திட்டம் அமல்படுத்தப்படாது என்று நேற்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய நேரடி உரையில் அவர் குறிப்பிட்டார்.

தீபகற்ப மலேசியாவில் இந்த திட்டத்தை அமல்படுத்துவதால் பொருள்கள் விலை மற்றும் சேவைக் கட்டணம் அபரிமித உயர்வு காண்பதைத் தவிர்க்க டீசலைப் பயன்படுத்தும் வர்த்தக வாகனங்களை வைத்திருக்கும் வணிகர்களுக்கு டீசலுக்கான உதவித் தொகை வழங்கப்படும் என அவர் சொன்னார்.

மானிய விலை டீசல் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் பத்து வகையான பொது போக்குவரத்து வாகனங்களும் 23 சரக்கு வர்த்தக வாகனங்களும் சம்பந்தப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :