ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

கடலோரங்களில் தடுப்பணைகளை சீரமைக்க மத்திய அரசிடம் வெ. 3.6 கோடி விண்ணப்பம்

ஷா ஆலம், நவ 4- சிலாங்கூர் மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் தடுப்பணைகளை சீரமைக்க 12வது மலேசியத் திட்டத்தின் கீழ் 3 கோடியே 60 லட்சம் வெள்ளி மத்திய அரசிடமிருந்து கோரப்பட்டுள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

தற்போதுள்ள அணைகள் 15 முதல் 20 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை என்பதோடு கடல் சீற்றத்தை தாங்கும் ஆற்றலை அவை கொண்டிருக்கவில்லை என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநிலம் 300 கிலோமீட்டர் நீளத்திற்கு தடுப்பணைகளை கொண்டுள்ளது. அவற்றில் சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர், சிப்பாங் பகுதிகளில் உள்ள அணைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டியுள்ளது என்றார் அவர்.

எங்களின் விண்ணப்பத்திற்கு அடுத்தாண்டில் ஒப்புதல் தரப்படும் என எதிர்பார்க்கிறோம். புதிதாக கட்டப்படும் தடுப்பணைகள் அடுத்த வரும் பல ஆண்டுகளுக்கு கடல் அலைகளைத்  தாங்கக்கூடியதாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று தடுப்பணைகளின் தற்போதைய நிலை மற்றும் கடல் பெருக்கை எதிர்கொள்ளக் கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செமென்தா உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இஷாம் இவ்வாறு கூறினார்.

கடல் பெருக்கை தடுக்கும் உடனடி நடவடிக்கையாக கம்போங் தோக் மூடா, கம்போங் சுங்கை செர்டாங், கம்போங் தோக் அடாம் மற்றும் காப்பரில் உள்ள கம்போங் சுங்கை ஜங்குட் ஆகிய இடங்களில் தடுப்பணைகளை தரம் உயர்த்துவதற்கு கூட்டரசு அரசாங்கம் 1.2 கோடி வெள்ளியை வழங்கியது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :