ECONOMYNATIONALPress Statements

கோவிட்-19 தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த விளக்கமளிப்பில் வெளிப்படை போக்கு தேவை- மருத்துவ நிபுணர்கள் சங்கம் கருத்து

கோலாலம்பூர், டிச 2– கோவிட்-19 தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து பொதுமக்ளுக்கு அரசாங்கம் தரும் விளக்கம் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்று மலேசிய பொது சுகாதார மருத்துவ நிபுணர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மலேசியா உரிய பலனைத்  பெறுவதை உறுதி செய்வதில் இதன் தொடர்பான தெளிவான விளக்கமளிப்பு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது என்று அச்சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் ஜைனால் அரிபின் ஓமார் கூறினார்.

கோவிட்-19 தடுப்பூசி தொடர்பில் பொதுமக்களிடம் காணப்படும் குழப்பத்தை நீக்கவும் சில தரப்பினர் வெளியிடும் எதிர்மறையான கருத்துக்களை முறியடிக்கவும் இந்நடவடிக்கை பெரிதும் துணை புரியும் என்றார் அவர்.

எந்தவொரு தடுப்பூசியாக இருந்தாலும் அதன் ஆக்கத் தன்மை தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் வளர்ந்த நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த தடுப்பூசியை போடுவதன் வழி பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக நாம் ஆக்கப்படுவோம் என்ற கூற்று முற்றிலும் தவறானது என்றும் அவர் விளக்கினார்.

கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான குழப்பம் தரும் தகவல்கள் பொதுமக்களுக்கு குறிப்பாக அந்த தடுப்பூசி அவசியம் தேவைப்படுவோருக்கு இழப்பைத் தரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தடுப்பூசி குறித்த உண்மையான மற்றும் நம்பகமான தகவல்களை பொதுமக்களிடம் சேர்ப்பதில் அரசு சாரா அமைப்புகள் அரசாங்கத்திற்கு உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :