ECONOMYNATIONALPBTSELANGOR

நிலத் தகுதியை மாற்றத் தவறினால் தொழிற்சாலைகள் உடைக்கப்படும்- சிலாங்கூர் அரசு எச்சரிக்கை

ஷா ஆலம், மார்ச் 19- விவசாய நிலங்களை தொழிலியல் நிலங்களாக விரைந்து தகுதி மாற்றம் செய்யும்படி தொழிற்சாலை உரிமையாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

அவ்வாறு செய்யாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் அல்லது வர்த்தக கட்டுமானங்களை உடைப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் எச்சரித்தார்.

நிலத் தகுதியை மாற்றுவதற்கு இதுவரை 363 தொழிற்சாலைகள் மட்டுமே விண்ணப்பம் செய்துள்ள வேளையில் மேலும் 3,400 தொழிற்சாலைகள் அவ்வாறு செய்வதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று அவர் சொன்னார்.

இதுவரை 194 நிலத் தகுதி தொடர்பான விண்ணப்பங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் 144 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 25 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்றார் அவர்.

தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் என்ற காரணத்தால் அனைத்து தொழிற்சாலைகளையும் நம்மால் உடைக்க இயலாது. இந்த விவகாரத்தை நாம் பொருளாதார ரீதியிலும் அணுக வேண்டியுள்ளது. இருந்த போதிலும் சமூகத்திற்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும் பட்சத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

சட்டவிரோத தொழிற்சாலைகளை சட்டப்பூர்வமாக்கும் காலக்கெடு கடந்தாண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்த போதிலும் நிலத்தை தகுதி மாற்றம் செய்வதற்கான வாய்ப்பு இன்னும் அவர்களுக்கு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

சட்டவிரோத தொழிற்சாலைகளை சட்டப்பூர்வமாக்கும் திட்டத்தின் கீழ் 1,246 தொழிற்சாலைகளுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஊராட்சி மன்றங்களுக்கு வர வேண்டிய வருமானம் பயனற்றுப் போவதை தடுக்கும் நோக்கில் தொழிற்சாலைகளை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :