ECONOMYPBTSELANGOR

நீர் வளத்தை பாதுகாக்கும் முயற்சியாக சிலாங்கூரில் 1,124 ஆறுகள் ஆர்ஜிதம் செய்யப்படும்

ஷா ஆலம், மார்ச் 21– நீர் வளங்கள் மாசுபடுதைத் தடுப்பதற்காக சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 1,124 ஆறுகள் மற்றும் துணை ஆறுகள் ஆர்ஜிதம் செய்யப்படும்

கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள சுமார் 1 கோடியே 20 லட்சம் மக்கள் நீர் விநியோகத் தடையை எதிர்நோக்கமாலிருப்பதை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் கூறியது.

663 ஆறுகளை அளவிடும் பணி முடிந்து மலேசிய அளவீடு மற்றும் வரைபட இலாகாவின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படவுள்ளது. எஞ்சியுள்ள 458 ஆறுகளில் இப்பணி வரும் 2023ஆம் ஆண்டு வரை கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று அந்த வாரியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இவ்வாண்டு ஜனவரி மாதம் வரை சுங்கை சிலாங்கூர், சுங்கை லங்காட், சுங்கை டாமன்சாரா ஆகிய மூன்று ஆறுகள் முழுமையான ஆர்ஜித வரைபடத்தைக் கொண்டுள்ளன.

1999 ஆம் ஆண்டு லுவாஸ் சட்டத்தின் 48ஆம் பிரிவுக்கேற்ப ஆற்றின் இடது மற்றும் வலது பக்கங்களில் தலா 50 மீட்டர் பகுதியை ஆர்ஜிதம் செய்வது இத்திட்டத்தின் தலையாய நோக்கமாக அமையும்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் உள்ள நீர்த் தேக்கங்கள் மற்றும் கடற்கரைகள் போன்ற நீர் வளப்பகுதிகளை பாதுகாப்பதற்காக 1999ஆம் ஆண்டு லுவாஸ் சட்டத்தின் 48(1)வது பிரிவுக்கேற்ப பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் உருவாக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :