PBTSELANGORWANITA & KEBAJIKAN

செந்தோசா தொகுதி முயற்சியில் 60 மகளிர் தொழில் முனைவோர் உருவாக்கம்

கிள்ளான், மார்ச் 21– செந்தோசா சட்டமன்ற தொகுதி ஏற்பாட்டில் ஈராண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட “வாவ்” எனப்படும் அற்புத மகளிர் திட்டத்தில் பங்கேற்ற 200 மகளிரில் 60 பேர் தொழில்முனைவோர்களாக உருவாகியுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் கேட்டரிங், பாரம்பரிய உணவு, பேக்கரி, வாசனை திரவியம் போன்ற பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

அவர்கள் தங்கள் உற்பத்தி் பொருள்களை காரில் வைத்து விற்பதற்கு ஏதுவாக பொருத்தமான இடங்களை தாங்கள் ஏற்படுத்தி தருவதாக அவர் சொன்னார்.

கோவிட்-19 பெருந் தொற்று பரவல் காலத்தில் குடும்ப வருமானத்தை பெருக்கிக் கொள்வதில் இந்த வர்த்தக நடவடிக்கைகள் அவர்களுக்கு பெரிதும் துணை புரிவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொருளாதார ரீதியாக கணவர்களுக்கு உதவும் நோக்கில் மகளிர் கடுமையாக உழைக்க தயாராக உள்ளனர். அவர்கள் மாதம் 3,000 வெள்ளி வரை வருமானம் ஈட்டுகின்றனர் என்றார் அவர்.

அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு செந்தோசா தொகுதி “வாவ்” அமைப்பின் ஏற்பாட்டில் இங்குள்ள எக்சகியூட்டிவ் கிளப்பில் நடைபெற்ற விருந்து நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த வாவ் அமைப்பில் மேலும் அதிகமான உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதேவேளையில் ஆண்டுக்கு குறைந்தது 100 மகளிர் தொழில்முனைவோரை உருவாக்கவும் இலக்கு வகுத்துள்ளதாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :