ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மைசெல் வழி 445 பேரின் குடியுரிமைப் பிரச்னைகளுக்குத் தீர்வு- கணபதிராவ் தகவல்

ஷா ஆலம், மார்ச் 22- மைசெல் எனப்படும் சிலாங்கூர் மாநில அரசின் சிறப்பு பிரிவின் வாயிலாக இவ்வாண்டு மார்ச் 11ஆம் தேதி வரை குடியுரிமை தொடர்பான 445 விண்ணப்பங்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

குடியுரிமை, குழந்தை தத்தெடுப்பு, பிறப்புப் பத்திரம், சிவப்பு அடையாளக் கார்டு என நான்கு பிரிவுகளில் விண்ணப்பங்களைத் தாம் பெற்றிருந்ததாக பரிவுமிக்க அரசாங்கத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

குடியுரிமை சம்பந்தப்பட்ட 267 பிரச்னைகளுக்கும் குழந்தை தத்தெடுப்பு தொடர்பான 88 பிரச்னைகளுக்கும் பிறப்பு பத்திரம் தொடர்பான 32 பிரச்னைகளுக்கும் சிவப்பு அடையாளக் கார்டு சம்பந்தப்பட்ட 58 பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது என்றார் அவர்.

விண்ணப்பங்கள் அதிகமாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் பட்டியலில் மலாய்க்கார்கள் முதலிடத்திலும் (50 விழுக்காடு) அதற்கு அடுத்த நிலையில் சீனர் (25 விழுக்காடு), இந்தியர்கள் (15 விழுக்காடு) மற்றும் பிற இனத்தினரும் (10 விழுக்காட்டினர்) உள்ளனர் என்று அவர் சொன்னார்.

கடந்த 2018இல் இந்த அடையாள ஆவணத் திட்டம் அமல்படுத்தப்பட்டது முதல் குடிநுழைவுத் துறை உள்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 2,554 மனுக்கள் பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட துறைகளிடம் சமர்ப்பிக்கப்படும்  விண்ணப்பங்கள் முறையாகவும் முழுமையாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக இரு சிறப்பு அதிகாரிகள் இத்திட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

விண்ணப்பங்களை அங்கீகரிப்பது உள்பட எந்த அதிகாரத்தையும் மத்திய அரசு அந்த அதிகாரிகளுக்கு வழங்கவில்லை. அவர்கள் மிகக்குறைவான அதிகாரத்துடன்  நான் வழங்கும் சிறிய அலவன்ஸ தொகையுடன் தங்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மற்றவர்களைப் போல் இவர்களும் ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.

இருந்த போதிலும் அந்த அதிகாரிகள் அர்ப்பண உணர்வுடன் தங்கள் கடமையை ஆற்றி வருகின்றனர். குடியுரிமை தொடர்பான மனுக்களை அவர்கள்  தேசிய பதிவுத் துறை, குடிநுழைவுத்துறை, உள்துறை அமைச்சு போன்ற அரசு துறைகளின் கவனத்திற்கு கொண்டுச் செல்வதோடு அந்த மனுக்கள் அங்கீகரிக்கப்படும் வரை சம்பந்தப்பட்ட துறைகளுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் அவர் சொன்னார்.

முறையான அடையாள ஆவணம் இன்றியும் அவற்றை பெறுவதற்கு விண்ணப்பம் செய்யும் வழி முறை தெரியாமலும் இருக்கும் ஏழைகளுக்கு உதவும் பொருட்டு மைசெல் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.

 


Pengarang :