Presiden Parti Keadilan Rakyat (KEADILAN) Datuk Seri Anwar Ibrahim pada sidang media pada 23 September 2020. Foto BERNAMA
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வருமானமின்றி தவிக்கும் மக்கள்- வாரி இறைக்கும் வங்கிகள்- அன்வார் காட்டம்

ஷா ஆலம், மார்ச் 27– மக்கள் வருமானமின்றி தவிக்கும் நிலையில் வங்கிகளும் அரச சார்பு நிறுவனங்களும் (ஜி.எல்.சி.) மேல் மட்ட அதிகாரிகளுக்கு போனஸ், அலவன்ஸ் என வாரி வழங்குவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மக்களில் பெரும்பகுதியினர் இன்னலை அனுபவித்து வரும் வேளையில் குறிப்பிட்ட சில தரப்பினர் மட்டும் லாபத்தை அள்ளிக் குவிப்பது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது என அவர் கூறினார்.

கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கு அடிமட்ட மக்கள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாத வங்கிகள் பணியாளர்களுக்கு சம்பள உயர்வையும் பங்குதாரர்களுக்கு லாப ஈவையும் வழங்கும் அளவுக்கு கடந்தாண்டில் லாபத்தை ஈட்டியது எப்படி என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

சம்பந்தப்பட்டத் தரப்பினர் லாபம் ஈட்டியது குறித்து நாங்கள் கேள்வியெழுப்பவில்லை. ஆனால், சிரமத்திலும் துன்பத்திலும் உள்ள எளிய மக்களை பலிகடாவாக்கி சில தரப்பினர் ஈட்டிய லாபம்தான் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றார் அவர்.

நோய்த் தொற்றின் தாக்கத்தை தாங்கிக் கொள்ளுங்கள் என சாதாரண மக்களுக்கு அரசாங்கம் ஆலோசனை கூறுகிறது. அதேசமயம், மேல் நிலையில் உள்ள வர்த்தக மற்றும் நிர்வாகத் தரப்பினருக்கு அந்த கடப்பாட்டிலிருந்து விலக்களிக்கிறது. இது உண்மையில் வேதனையைத் தருகிறது என்று அவர் சொன்னார்.

பணக்காரர்களின் வாழ்க்கை எந்தவொரு பாதிப்பும் இன்றி சீராக செல்லும் நிலையில் சாதாரண மக்கள் கடும் சுமையை தாங்கி நிற்கும் அவலத்தை பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கம் உணர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 


Pengarang :