MEDIA STATEMENTNATIONALSELANGORYB ACTIVITIES

நாடாளுமன்றம் முடக்கம்- அரசாங்கத்தின் காரணம் அறிவுக்கு பொருந்தவில்லை- அன்வார் சாடல்

கோம்பாக், மார்ச் 28- – அவசரகாலப் பிரகடனம் காரணமாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறும் காரணம் அறிவுக்கு பொருந்தும் வகையில் அமையவில்லை என கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நாட்டில் அவசரகாலத்தின் போது பல்வேறு துறைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் நாடாளுமன்றத்திற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதை சிறிதும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்று அவர் சொன்னார்.

கல்வி, பொருளாதாரம், விளையாட்டு உள்பட பல்வேறு துறைகள் செயல்படுவதற்கு அனுமதியளித்துள்ள பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கம் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் மட்டும் ஏன் எதிர்மறையான போக்கை கடைபிடிக்கிறது என்று அவர் கேள்வியெழுப்பினார்.

பெரிக்கத்தான் அரசாங்கத்தின் ஆட்சியில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதே சமயம் நாடாளுமன்றம் கூட்டப்படுவதை தடுக்க அவசரகாலம் ஒரு கேடயமாக பயன்படுத்தப்படுகிறது என்றார் அவர்.

இங்குள்ள பத்து கேவ்சில் நடைபெற்ற கெஅடிலான் இன்னும் பொருத்தமான கட்சியே எனும் தலைப்பிலான தலைவர் பேருரை நிகழ்வில் உரையாற்றிய போது எதிர்க்கட்சித் தலைவருமான அவர் இதனைத் தெரிவித்தார்.

பதினெட்டு வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை குறித்து பேசிய அவர், வாக்களிப்பதற்கான வயது வரம்பை 21 வயதிலிருந்து 18 வயதாக குறைக்கும் தீர்மானத்தை கட்சி வேறுபாடின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டதாக கூறினார்.

அந்த நடைமுறையின் அமலாக்கம் ஒத்தி வைக்கப்பட்டதற்கு பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் அரசாங்கத்தின் அச்ச உணர்வே காரணம்  என்றும் அவர் சொன்னார்.

வாக்களிப்பதற்கான வயது வரம்பை குறைக்கும் தீர்மானத்திற்கு கெஅடிலான், ஜசெக, அமானா, அம்னோ, மசீச மற்றும் கட்சித் தாவிய கும்பல் உள்பட அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இப்போது இளைஞர்களைக் கண்டு அவர்கள் பயப்படுகின்றனர் என்றார் அவர்.

வாக்களிப்பதற்கு 18 வயது முதிர்சியானதல்ல என ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால் 90 வயதான போதிலும் சிலர் இன்னும் முதிர்ச்சியடையாமல் உள்ளனர். முதிர்ச்சி வயதைப் பொறுத்து தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக, ஒருவரின் மனப்பகுவத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

 


Pengarang :