ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூரில் ரிபோர்மாசி இயக்கம் தொடரும்- மந்திரி புசார் சூளுரை

ஷா ஆலம், மார்ச் 28- கெஅடிலான் கட்சியின் வலுவான கோட்டையாக சிலாங்கூர் மாநிலம் விளங்குவதால் இங்கு ரிமோர்மாசி இயக்கத்தின் கோட்பாடுகள் தொடரப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ  அமிருடின்  ஷாரி சூளுரைத்துள்ளார்.

தன்மானம் காக்கப்படுவதையும் நாட்டிலும் மாநிலத்திலும் மாறுதல்களைக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதையும் உணர்வாகக் கொண்டு இந்த கட்சி தோற்றுவிக்கப்பட்டுள்ளதை கட்சியின் கிளைகள், இளைஞர் மற்றும் மகளிர் அமைப்புகளின் உருவாக்கம் புலப்படுத்துகிறது என்று அவர் சொன்னார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்குமுறைகளால் 1998ஆம் ஆண்டில் நாம் உறக்கத்திலிருந்து விழித்தோம். வீறுகொண்டெழுந்து தெருவில் இறங்கி போராடினோம். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தாக்கப்பட்டார்கள், நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்கள், நெருக்குதலுக்கு ஆளானார்கள், வேலை இழந்தார்கள். ஆனாலும் இந்த பிரச்னை இன்னும் ஓயவில்லை.

ஆகவேதான் ரிமோர்மாசி இயக்கம் இன்னும் தொடரப்பட வேண்டும் என விரும்புகிறோம். ரிபோர்மாசி இயக்கத்தில் நம்முடன் துணை நிற்பதற்கும் கெஅடிலான் கட்சியை வலுவாக கோட்டையாக உருவாக்குவதற்கும் நமது சகாக்கள் எப்போதும் துணை நிற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் அவர்.

பத்து கேவ்ஸ், டேவான் ஸ்ரீ சியான்தானில்  நேற்று நடைபெற்ற ரிமோர்மாசி மன்றத்தின் நிகழ்வில் உரையாற்றுகையில் சிலாங்கூர் மாநில தலைமைத்துவ மன்றத்தின் தலைவருமான அவர் குறிப்பிட்டார்.

அதிகாரம், பதவி மற்றும் அந்தஸ்து பற்றி கவலைப்படாமல்  மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற  எண்ணமே ரிமோர்மாசி இயக்கத்தின் உண்மையான இலக்காக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பிரதமராக, மூத்த மந்திரியாக, மந்திரியாக யார் வரவேண்டும் என்பதெல்லாம் நமக்கு ஒரு பொருட்டல்ல. மாறாக, அரசு நிர்வாகம், சட்டத்துறை, நீதித்துறை போன்றவற்றில் மாற்றங்கள் வர வேண்டும் என்பதுதான் நமது எதிர்பார்ப்பு என்றார் அவர்.


Pengarang :