ECONOMYPBTSELANGOR

தாமான் ஸ்ரீமூடா புதிய மார்க்கெட்டில் சோதனை- ஐவருக்கு குற்றப்பதிவு வழங்கப்பட்டது

ஷா ஆலம், ஏப் 6- இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீமூடா புதிய மார்க்கெட்டில் ஷா ஆலம் மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள் நேற்று முன்தினம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஐந்து வியாபாரிகளுக்கு குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன.

பொருள்களுக்கான விலைப்பட்டியல் வைக்காதது உள்ளிட்ட காரணங்களால் அந்த வணிகர்களுக்கு குற்றப்பதிவு வழங்கப்பட்டது என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவு பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

வர்த்தக லைசென்ஸ்களை காட்சிக்கு வைக்காதது மற்றும் தடை செய்யப்பட்ட இடங்களில் வியாபாரம் செய்தது போன்ற குற்றங்களை புரிந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

வர்த்தக மையங்களில் சுத்தம், சுகாதாரம் பேணப்படுவதையும் வர்த்தக லைசென்சில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுவதையும் உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.

இதுதவிர, வியாபாரிகள் சான்று பெற்ற தராசுகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதையும் இந்த சோதனை நடவடிக்கை இலக்காக கொண்டிருந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கும் சிறு வியாபாரிகள் தங்கள்  வர்த்தகத்தை விரிவுபடுத்திக் கொள்வதற்கும் ஏதுவாக வியாபாரிகள் இந்த மார்க்கெட்டை சிறப்பான முறையில் நிர்வகிக்க வேண்டும் என்பதோடு விதிமுறைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும் என்று ஷாரின் கேட்டுக் கொண்டார்.

இந்த சோதனை நடவடிக்கையில் உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் ஷா ஆலம் பிரிவு அமலாக்க அதிகாரிகளும் மாநகர் மன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

 


Pengarang :