ECONOMYPBTSELANGOR

கம்போங் மாணிக்கம் வியாபாரிகள் பாங்கி லாமா சந்தைக்கு மாற்றப்படுவார்கள்

ஷா ஆலம், ஏப் 9- கம்போங்  மாணிக்கம் பகுதியில் சாலை ரிசர்வ் நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வியாபார நடவடிக்கைகளும் பாங்கி லாமா சந்தைக்கு மாற்றப்படும் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உடனடியாக உதவுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மக்களின் நலனில் மாநில அரசுக்கு உள்ள அக்கறையை புலப்படுத்தும வகையில் உள்ளது என்று அவர் சொன்னார்.

மாநில அரசு எந்த நடவடிக்கையையும் சுய விருப்பத்தின் பேரில் அல்லாமல் சட்ட விதிகளுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்படுகிறது. கம்போங் மாணிக்கம் பகுதியை பொறுத்தவரை அரசாங்க மற்றும் தனியார்  நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

இவ்விவகாரம் மீது பெறப்பட்ட புகார்களை நன்கு ஆராய்ந்து சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள விதிகளுக்கு ஏற்பவே அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

முறையாக பராமரிக்கப்படாத உணவகம், பொருள் கிடங்கு, கார் கழுவும் மையம், அங்காடி கடை உள்ளிட்ட 14 சட்டவிரோத வர்த்தக மையங்கள் அப்பகதியில் செயல்படுவது கண்டறியப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.

சாலைக்கு மிக அருகில் அமைந்த அந்த கடைகளால் வாகனமோட்டிகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருந்ததோடு அக்கடைகளுக்கு சட்டவிரோத மின் இணைப்பும் ஏற்படுத்தப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

நிபந்தனைகளுக்கு உட்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு மாற்று இடங்களை ஏற்பத்தித் தரும் முயற்சியில் ஊராட்சி மன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் வாயிலாக மாநில ஈடுபடும் என்றும் அவர் உறுதியளித்தார்.

பாங்கி லாமாவில்  கம்போங் மாணிக்கம் பகுதியில் சாலை ரிசர்வ் நிலத்தில் செயல்பட்டு வந்த 14 கடைகளில் 12 கடைகளை காஜாங் நகராண்மைக்கழக அமலாக்க அதிகாரிகள் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை உடைத்தனர்.

அந்த கடைகளை அகற்றுவது தொடர்பில் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் 10ஆம் தேதி முதல் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரை உரிமையாளர்களுக்கு பல முறை நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.


Pengarang :