ECONOMYMEDIA STATEMENTSELANGOR

தொழிற்சாலை, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி பெற  கட்டணம்

ஷா ஆலம், ஏப் 23- சிலாங்கூர் மாநிலம் கொள்முதல் செய்யும் தடுப்பூசியைப் பெறும் தொழிற்சாலை மற்றும் கட்டுமானத் துறை தொழிலாளர்களுக்கு கட்டணம் விதிக்கப்படும்.

அந்த தடுப்பூசியை வாங்குவதற்கு உண்டாகும் செலவை ஈடுகட்டும் வகையில் அந்த குறைந்த பட்ச கட்டணம் வசூலிக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த தடுப்பூசிக் கட்டணத்தை செலுத்துவதில் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் சிரமம் இருக்காது என நம்புகிறோம். இதன் வழி முன்கூட்டியே தடுப்பூசியைப் பெறுவற்குரிய வாய்ப்பும் கிட்டும் என்றார் அவர்.

வரும் ஜூன் மாதம் தடுப்பூசி கிடைத்தவுடன் இதன் தொடர்பான விரிவான விபரங்கள் வெளியிடப்படும் என்று  இங்குள்ள ஜூப்ளி பேராக் மண்டபத்தில் அரசு ஊழியர்களுடனான சந்திப்பு நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

ஐந்து வகையான தடுப்பூசிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவற்றில் எந்த வகை தடுப்பூசியை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்றை விரைந்து முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஏதுவாக 30 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலான  தடுப்பூசிகளைப் கொள்முதல் செய்வதற்கு மாநில அரசு ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

 


Pengarang :