ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய வாய்ப்பு- சிலாங்கூர் அரசு வழங்குகிறது

ஷா ஆலம், ஜூன் 13- பந்திங், புக்கிட் சங்காங் பகுதியில் உருவாகும் முதலாவது உணவு உத்தரவாத திட்டத்தில் பங்கேற்கேற்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் விவசாயத்தில் ஆர்வம் முற்றும் முழு ஈடுபாடு ஆகியவை முக்கிய நிபந்தனைகளாக  கொள்ளப்படும்.

மேற்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யக்கூடிய மற்றும் 18 முதல் 40 வயது வரையிலானவர்கள் கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என்று விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

விவசாயம் செய்வதற்கான இடம் தொடங்கி உற்பத்தி பொருள்களை சந்தைப் படுத்துவது வரை வசதிகளையும் மாநில அரசு சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து ஏற்படுத்தித் தரும். நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம். ஆனால் பங்கேற்போர் முழு ஈடுபாடு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் ஸ்மார்ட் அக்ரோ ஃபார்ம் எனும் விவேக விவசாய பண்ணை பகுதியில் இத்திட்டம் அமலாக்கம் காணும். இத்திட்டத்தின் கீழ் 30 பேருக்கு தலா ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய வாய்ப்பு தரப்படும் என்றார் அவர்.

விவசாயம், மீன் வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்புக்கான இடங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். ஆண்டுக்கு 200 பேர் வீதம் 5 ஆண்டுகளுக்கு வேளாண் தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒரு கோடி வெள்ளி நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் கீழ் விவசாயத் துறைக்கு 1 கோடியே 30 லட்சம் வெள்ளிக்கும் மேல் ஒதுக்கப்படும் தகவலை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வெளியிட்டார்.  இத்திட்டத்தின் கீழ் உணவு உத்தரவாத திட்டத்திற்கு ஒரு கோடி வெள்ளியும் விவசாய பரிவுத் திட்டத்திற்கு 15 லட்சம் வெள்ளியும் உற்பத்தி பெருக்க திட்டத்திற்கு 19 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளியும் ஒதுக்கப்பட்டுள்ளது.


Pengarang :