EXCO pembangunan sosio ekonomi,
MEDIA STATEMENTPBTSELANGOR

முன்னால் தோட்ட  ஆலயங்களே பொது ஆலயம்- அதற்கு  முறையாக நிலம் வழங்கப்பட்டு விட்டது.

ஷா ஆலம், ஜூன் 26- இந்நாட்டில் உள்ள இந்துக்களுக்கு இன்னும் எத்தனை ஆலயங்கள் நிர்மாணிக்கப்பட வேண்டும் என்பதை இந்துக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்  வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

சிலாங்கூர் மாநிலத்தில்  ஆங்காங்கே சட்டவிரோதமாக குடும்பக் கோயில்கள் மீதுதான் அமலாக்கத் தரப்பினர் நடவடிக்கை எடுப்பதாக  அவர் சொன்னார்.

சிலாங்கூர், சுபாங் ஜெயா சாலையில் அமைந்துள்ள சுமார் 20 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு அகோர வீரம்மாள் காளியம்மன் ஆலயத்தை  அண்மையில் பெட்டாலிங் மாவட்ட நில மற்றும் மாவட்ட அலுவலக அமலாக்க அதிகாரிகளால் உடைக்கப்பட்டது தொடர்பில் கருத்துரைத்த போது அவர் இவ்வாறு சொன்னார்.

சம்பந்தபட்ட அந்த ஆலயத்தை அகற்ற வேண்டிய கட்டாயத்தின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மாநில அரசைப் பொறுத்த வரை இந்த ஆலயம் 20 ஆண்டுகால சரித்திரத்தை மட்டுமே கொண்டுள்ளது.

சைம் டார்பி நிறுவனத்தின் மேம்பாட்டு திட்டங்கள் காரணமாக கடந்த 80 ஆம் மற்றும் 90 ஆம் ஆண்டுகளில் பொது மக்கள் புலம் பெயர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியில் குடியேறியுள்ளனர், இங்குள்ள டி.ஓ.எல். எனப்படும் தற்காலிக இடத்தில் மாநில அரசின் நாய்கள் பராமரிப்பு மையம் இருந்துள்ளது.

அங்குள்ள மக்கள் அரசாங்கத்தின் அனுமதியின்றி சொந்தமாக வழிபாட்டுத் தலங்களை அமைத்துள்ளனர். 2008 ஆம் ஆண்டிற்கு முன்னரே பெட்டாலிங்  மாவட்ட நில அலுவலகம் இந்த ஆலயத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. பிறகுதான்  ஆலயத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2017ல் ஆலயத்தை அகற்ற தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டது.  பில்மோர் மட்டுமின்றி, சிலாங்கூர் மாநிலத்தில் இருந்த தோட்டம் மற்றும் பொது ஆலயத்திற்கு முறையாக நிலம் வழங்கப்பட்டுவருகிறது. மாநில அரசு பொது ஆலயங்களின்  கோரிக்கைகளை என்றும் கைவிட்டதில்லை.

ஆனால்,  தனிப்பட்ட முறையில் அமைக்கப்பட்ட குடும்ப ஆலயங்கள் பொது ஆலயங்களுக்கு ஈடான சலுகையை அரசாங்கத்திடமிருந்து  எதிர் பார்க்கக்கூடாது. 

சம்பந்தப்பட்ட ஆலயப் பொறுப்பாளர்கள் நில விவகாரம் தொடர்பில் கடந்தாண்டு என்னைச் சந்தித்தனர். நில அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு மாற்று நிலம் பெறுவதற்கு முயற்சி மேற்கொண்ட போது,  தோட்டம் மற்றும் பொது ஆலயங்களின் தேவைகளுக்கே அரசு நிலம் வழங்கும் விவகாரத்தில்  முன் உரிமை வழங்கும் அரசின் கொள்கை நினைவுறுத்தப்பட்டது.  

இந்த ஆலய உடைப்பு விஷயத்தில்  மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டதற்கான காரணம், முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்க காலத்தின் போது அதிகாரிகள் மேற்கொண்ட தன்மூப்பான நடவடிக்கைகளே, முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

வழக்கமாக இது போன்ற நடவடிக்கைகளின் போது  அதிகாரிகள் முன்கூட்டியே என்னிடம் தெரிவிப்பார்கள். ஆனால் சில அதிகாரிகள்  தன்மூப்பாக செயல்பட்டு சுமூகமான தீர்வு ஏற்படுவதில் சிக்கலை உண்டாக்கி விடுகின்றனர் என்று அந்த ஆலய உடைப்பு தொடர்பில் விளக்கமளித்த போது கணபதிராவ் குறிப்பிட்டார்.


Pengarang :