ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

வெள்ளைக் கொடி ஏற்றிய ஐந்து குடும்பங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் உதவி

ஷா ஆலம், ஜூலை 3- வெள்ளைக் கொடியை வீட்டின் முன் ஏற்றிய ஐந்து குடும்பங்களுக்கு ஸ்ரீ கெம்பாங்கான் தொகுதி சார்பில் உதவி வழங்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன்னர் தங்கள் தொகுதியிலுள்ள கோவிட்-19 நோய்த் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டிருந்த போது வெள்ளைக் கொடியை ஏற்றிய குடும்பங்களை சந்திக்க நேர்ந்ததாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இயான் யோங் ஹியான் வா கூறினார்.

நாங்கள் சொந்தமாக அடையாளம் கண்டவர்கள் தவிர்த்து, வெள்ளைக் கொடி பறக்கும் வீடுகள் குறித்த தகவல்களை பொதுமக்களும் வழங்கி  உதவினர். சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு உடனடியாக உணவுப் பொருள்களை வழங்கி உதவினோம் என்றார் அவர்.

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மேலும் அதிகமானோர் வீட்டின் முன் வெள்ளைக் கொடியை ஏற்றும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் முதல் நாளில் பல்வேறு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அடங்கிய 250 உணவுப் பொட்டலங்களை பொதுமக்களுக்கு தாங்கள் விநியோகித்த தாக சுங்கை ராமால் சட்டமன்ற உறுப்பினர் மஸ்வான் ஜோஹார் கூறினார்.

முன்பு 60 வெள்ளி மதிப்பிலான பொருள்களை பொதுமக்களுக்கு வழங்கிய வேளையில் தற்போது  அப்பொருள்களின் மதிப்பை 80 வெள்ளியாக உயர்த்தியுள்ளோம். உணவு கையிருப்பு கூடுதல் நாட்களுக்கு இருக்கும் வகையில் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம் என்றார் அவர்.

எங்கள் தொகுதியில் வெள்ளைக் கொடி பறக்காமலிருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். ஏனென்றால் வெள்ளைக் கொடி பறப்பதற்கு முன்பாகவே அவர்களுக்கு உதவி கிடைத்து விடும் என அவர் சொன்னார்.


Pengarang :