ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

500 வெள்ளி உதவித் தொகைக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க மந்திரி புசார் வேண்டுகோள்

ஷா ஆலம், ஜூலை 12– சிலாங்கூர் அரசின் 500 வெள்ளி உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்யும்படி மாநிலத்திலுள்ள தகுதி உள்ள மாற்றுத் திறனாளிகளை  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இம்மாதம் 1 தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை இந்த உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அவர் சொன்னார்.

இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை திட்டத்திற்கு சிலாங்கூர் அரசு கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் வழி 600,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றினால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியிருக்கும் இத்தரப்பினருக்கு உதவும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.

இந்த உதவித் திட்டத்திற்கு கடந்த வாரம் வரை 4,264 விண்ணப்பங்களை தாங்கள் பெற்றுள்ளதாக யாவாஸ் அறவாரியம் கூறியிருந்தது.

நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைக் கொண்ட 1,200 பேருக்கு உதவித் தொகை வழங்கும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் எதிர்பார்த்ததை விட அதிகமானோரிடமிருந்து  விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாவாஸ் தலைமை நிர்வாகி கான் பெய் நீய் கூறினார்.

18 வயதுக்கும் மேற்பட்ட மலேசிய பிரஜையாகவும் சமூக நல இலாகாவின் மாற்றுத் திறனாளி அட்டையைக் கொண்டிருப்பவராகவும் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்வோருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

இந்த உதவித் தொகை தொடர்பான  மேல் விரங்களை www.aninselangor.com/bantuanOKU  எனும் அகப்பக்கம் வாயிலாக பெறலாம்.


Pengarang :