V Ganabatirau bercakap kepada media selepas Majlis Sambutan Perayaan Ponggal peringkat Selangor di Kuil Sri Subramaniam, Kajang pada 19 Januari 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

ஊராட்சி மன்ற மின்சுடலைகள் இனி மாலை 6.30 மணி வரை செயல்படும்-கணபதிராவ்

ஷா ஆலம், ஜூலை 25- மூன்று ஊராட்சி மன்றங்களின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மின்சுடலைகள் இனி மாலை 6.30 மணி வரை செயல்படும். தற்போது அந்த மின்சுடலைகள் மாலை 4.30 மணி வரை மட்டுமே இயங்கி வருகின்றன.

கோவிட்-19 நோய்த் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஷா ஆலம் மாநகர் மன்றம், சுபாங் ஜெயா மாநகர்  மன்றம் மற்றும் கிள்ளான் நகராண்மைக் கழகம் ஆகிய ஊராட்சி மன்றங்களின் கீழ் செயல்படும் அந்த மூன்று மின்சுடலைகளிலும் பணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரிவுமிக்க அரசாங்கத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

அண்மையில் அந்த மூன்று ஊராட்சி மன்றங்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் இந்த பணி நேர அதிகரிப்பு தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாக அவர் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்று அதிகரிப்பு காரணமாக இந்தியர்கள் உள்பட அனைத்து நிலையிலான மக்கள் மத்தியிலும் மரண எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மின்சுடலைகளில்  ஏற்பட்டுள்ள இட நெருக்கடி காரணமாக இறந்தவர்களின் உடல்களை முறையாக தகனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் ஊராட்சி மன்றங்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் பயனாக மின்சுடலைகளில் பணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவமனை சவக்கிடங்குகளில் தேங்கியிருக்கும் பிரேதங்களை விரைந்து தகனம் செய்வதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

இதனிடையே, சவக்கிடங்கில் காத்திருக்கும் இந்துக்களின் உடல்களை இடுகாட்டில் நல்லடக்கம் செய்வது தொடர்பான பரிந்துரையை தமது தரப்பு காய்ஸ் எனப்படும் சிலாங்கூர் இந்தியர் நல்லடக்கச் சடங்கு சமூக நல சங்கத்திடமிருந்து  பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரேதங்களை நல்லடக்கம் செய்வதற்கு போதுமான இடமும் அந்த பணியை மேற்கொள்வதற்கு காய்ஸ் சங்கம் தயாராகவும் இருக்கும் போது எதற்காக பிரேதங்களை தகனம் செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்  என்று அச்சங்கத்தின் தலைவர் கருதுவதாகவும் கணபதிராவ் கூறினார்.

காய்ஸ் சங்கத்தின் இந்த கருத்தை  சிலாங்கூரிலுள்ள பல மயான பரிபாலன சங்கங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதோடு இவிவகாரத்தில் அச்சங்கத்துடன் இணைந்து செயல்படவும் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :