HEALTHMEDIA STATEMENTNATIONALPBT

பூச்சோங் இண்டா மையத்தில் தினசரி 1,500 பேர் தடுப்பூசி பெற வாய்ப்பு

பூச்சோங், ஜூலை 27- பூச்சோங் இண்டாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள தடுப்பூசி செலுத்தும் மையம் சுற்றுவட்டார மக்கள் தடுப்பூசி பெறுவதை எளிதாக்கியுள்ளது.

நேற்று தொடங்கி செயல்பட்டு வரும் இந்த தடுப்பூசி மையம் நாளொன்றுக்கு சுமார் 1,500 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

இந்த மையம் திறக்கப்பட்டது இவ்வட்டார மக்களுக்கு கிடைத்த ஒரு நற்செய்தியாகும். முன்பு இவ்வட்டார மக்களில் ஒரு பகுதியினர் செத்தியா ஆலம், ஐடியல் ஷா ஆலம், சுங்கை லோங் காஜாங் போன்ற தொலைவான பகுதிகளுக்கு தடுப்பூசி செலுத்துவற்கு செல்ல வேண்டியிருந்தது என அவர் சொன்னார்.

ஆகவே, சுற்றுவட்டார மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விரைந்து தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளும்படி தாம் கேட்டுக் கொள்வதாக ஊராட்சி மன்றங்களுக்கான  ஆட்சிக்குழு  உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

இங்குள்ள டேவான்  எம்.பி.பி.ஜே. சமூக மண்டபத்தில் செயல்பட்டு வரும் இந்த தடுப்பூசி மையத்தின் நடவடிக்கைகளை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பெட்டாலிங் மாவட்டத்தில் மேலும் சில தடுப்பூசி மையங்கள் இன்று தொடங்கி செயல்படுவதாகவும் இதன் வழி தினசரி 30,000 பேர் தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டார்.

இதுவரை பெட்டாலிங் மாவட்டத்தில் 18 விழுக்காட்டினர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் சுமார் 50 விழுக்காட்டினர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர் என்றார் அவர். 

 


Pengarang :