Yang di-Pertuan Agong Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah. Foto Facebook Istana Negara
ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

அனுமதியின்றி அவசரகாலம் நீக்கம்- பேரரசர் வருத்தம்

கோலாலம்பூர், ஜூலை 29– இம்மாதம் 26 ஆம் தேதி வெளியிட்ட ஒர் அறிக்கையின் வாயிலாக அனைத்து அவசரகாலச் சட்டங்களையும் ரத்து செய்த அரசாங்கத்தின்  செயல் குறித்து மாட்சிமை தங்கிய பேரரசர் தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த அவசரகாலச் சட்டங்களை ரத்து செய்வதற்கு தன்னிடம் ஒப்புதல் பெறப்படவில்லை என்பதையும் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா சுட்டிக் காட்டியுள்ளார்.

இஸ்தானா நெகாராவின் அரச விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி டத்தோ இண்ட்ரா அகமது பாடில் சம்சடின் அறிக்கை ஒன்றில் வாயிலாக இதனைத் தெரிவித்தார்.

மாமன்னர் அங்கீகாரம் அளித்த அனைத்து அவசரகாலச் சட்டங்களையும் அரசாங்கம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக கடந்த 26 ஆம் தேதி  அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை குறித்து மாமன்னர் மிகுந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார் என்று டத்தோ இண்ட்ரா அகமது கூறினார்.

அவசரகாலம் ரத்து செய்யப்படுவது தொடர்பான அனைத்து பரிந்துரைகளும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட வேண்டும் என கடந்த 24 ஆம் தேதி நாடாளுமன்றம் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான் மற்றும் தேசிய சட்டத் துறைத் தலைவர் இட்ருஸ் ஹருண் ஆகியோருடன் தாம் நடத்திய சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவு அமல் செய்யப்படாதது குறித்தும் மாமன்னர்  ஏமாற்றம் தெரிவித்துள்ளதாக அவர் சொன்னார்.

பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் கடந்த 26 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை சரியானது அல்ல என்பதோடு நாடாளுமன்ற உறுப்பினர்களை குழப்பும் வகையிலும் உள்ளது என்று மாமன்னர் உறுதிபடத் தெரிவித்துள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :