ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் 50% பெரியவர்கள் இம்மாத இறுதிக்குள் 2 டோஸ் தடுப்பூசியைப் பெற்றிருப்பர்- கைரி தகவல்

ஜெம்புல் ஆக 1- இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் நாட்டிலுள்ள 18 வயதுக்கும் மேற்பட்ட 50 விழுக்காட்டு மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருப்பர் என்று அரசாங்கம்  நம்பிக்கை கொண்டுள்ளது.

இது வரை நாட்டில் 29 விழுக்காட்டுப் பெரியவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளது மற்றும் தற்போது தடுப்பூசியைச் செலுத்தும் பணிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்படுவது ஆகியவற்றின் அடிப்படையில் இவ்வாறு கணிக்கப்படுவதாக பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

இது தவிர மேலும் 59 விழுக்காட்டு மலேசியர்கள் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இம்மாதம் 31 ஆம் தேதி தேசிய தினத்தை கொண்டாடும் போது நாட்டில் 50 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருப்பர். இதுவே எங்களின் புதிய இலக்காகும் என்றார் அவர்.

நேற்று வரை நாட்டில் 2 கோடியே 5 லட்சத்து 33 ஆயிரத்து 660 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 1 கோடியே 38 லட்சம் பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 67 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

இதனிடையே, முன்பதிவு இன்றி நேரடியாக தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி பெறும் நடைமுறை மூத்த குடிமக்களை இலக்காக கொண்டு மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றத் தகவலையும் அமைச்சர் கைரி வெளியிட்டார்.

 


Pengarang :