ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

கோவிட்-19 நோய் எதிர்ப்பு சக்தி சோதனையை மேற்கொள்ள வேண்டாம்- பொது மக்களுக்கு அறிவுறுத்து

கோலாலம்பூர், ஆக 7- கோவிட்-19 நோய் எதிர்ப்பு சக்தி சோதனையை மேற்கொள்ள வேண்டாம் என பொது மக்கள் கேட்டுக்  கொள்ளப்பட்டுள்ளனர். இச்சோதனை தொடர்பான  எந்த மருத்துவ வழிகாட்டியும் இதுவரை இல்லை என்று தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர்  கைரி ஜமாலுடின் கூறினார்.

அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் (சி.டி.சி.) மற்றும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ.) வெளியிட்டுள்ள வழிகாட்டியின்படி அமெரிக்காவிலும் இதர நாடுகளிலும் இத்தகைய சோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டவில்லை என்று அவர் சொன்னார்.

உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி சோதனையில் துல்லியமான முடிவு கிடைக்கும் என்பதை உறுதிபடுத்தும் எந்த மருத்துவச் சான்றுகளும் கிடையாது  என்றார் அவர்.

இங்குள்ள பெர்சாடா பிளஸ் ஒருங்கிணைந்த தடுப்பூசி மையத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சு விரைவில்  அறிக்கையை வெளியிடும் எனக் கூறிய அவர், கோவிட்-19 தடுப்பூசியை பெறுவதால் நோய் எதிர்ப்பு முறையில் ஏற்படக்கூடிய விளைவுகள் மீது ஐ.எம்.ஆர். எனப்படும் மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தற்போது ஆய்வினை மேற்கொண்டு வருவதாகச் சொன்னார்.

அந்த ஆய்வின் முடிவுகள் விரைவில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 


Pengarang :