ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

பருவ நிலை மாற்றம் காரணமாக நாட்டின் உணவு உற்பத்தியில் பாதிப்பு

கோலாலம்பூர், அக் 4- தஞ்சோங் காராங்கில் கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இரண்டாம் தவணைக்கான நெல் நடவு எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. கோடை காலத்தை எதிர்பார்த்த நிலையில் அது பொய்த்துப் போய் இடை விடாது மழை பெய்த வண்ணம் இருந்தது.

இதனால் சிலாங்கூர் மாநிலத்தின் வட பகுதியில் உள்ள நெல் வயல்கள் நீரில் மூழ்கியதோடு நாற்றுகளையும் பாழ்படுத்தியது. இதன் விளைவாக நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டு வரும் நவம்பர் மாதம் எதிர்பார்க்கப்படும் அறுவடை எதிர்பார்த்த பலனைத் தராது என அஞ்சப்படுகிறது.

பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட இந்த நிலையற்ற வானிலை தஞ்சோங் காராங், சிகிஞ்சான், சபாக் பெர்ணம் உள்ளிட்ட பகுதிகளை மட்டுமின்றி நாட்டின் அனைத்து பகுதிகளையும் பாதித்துள்ளது.

மக்களின் நடவடிக்கை காரணமாக  GHG எனப்படும் பசுமை இல்ல வளிமத்தின் அளவு அதிகரித்து உலகில் வெப்ப நிலை உயர்வு கண்ட காரணத்தால் இந்த பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த பசுமை இல்ல வளிமத்தின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் உலகம் மிகப்பெரிய அளவில் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள நேரிடும்.

சீதோஷண நிலை மாற்றம் கடந்த பத்தாண்டுகளாக நெல் விவசாயத்தில் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயியான பைருள் ஜைனி முகமது தோய்ப் ( வயது 36) கூறினார்.

எனினும், கடந்த ஐந்தாண்டுகளாக அந்த மாற்றத்தின் தாக்கம் அதிகமாக உணரப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய பருவநிலை நாம் கணிக்க முடியாத அளவுக்கு உள்ளது. வழக்கமாக நவம்பர் மாத கடையில்தான் பருவ மழை பெய்யும். ஆனால் அண்மைய காலமாக நவம்பர் மாதம் முழுவதும்  தொடர்ச்சியாக மழை பெய்வதோடு அடிக்கடி வெள்ளமும் ஏற்படுகிறது என்றார் அவர்.


Pengarang :